`கோயில் முடிவில் வருத்தம்!’-மலபார் தேவசம் போர்டால் திருமணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருநர் தம்பதி

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் திருநம்பி நிலன் கிருஷ்ணா (23). திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அத்விகா (23), திருநம்பி. நிலன் கிருஷ்ணாவும், அத்விகாவும் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ள பின்மார்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். பணியின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், பலரையும்போல திருமணம் செய்து சமூகத்தில் வாழ முடிவெடுத்தனர். இதற்காக கொல்லங்கோடு காச்சாங்குறிச்சி கோயிலில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

கோயிலில் திருமணம் செய்வதற்காக தேதி முன்பதிவு செய்தனர். அதன்பின்னர் அழைப்பிதழ் அச்சடித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விநியோகம் செய்தனர். அழைப்பிதழிலும் கோயிலில் வைத்து திருமணம் செய்வதாக அச்சிட்டிருந்தனர். கடந்த மாதம் 24-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால், திருநங்கை, திருநம்பி ஆகியோர் திருமணம் என்பதால் அதை கோயிலில் வைத்து நடத்த முடியாது என இரண்டு நாள்களுக்கு முன் கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து அவர்களது திருமணம் கோயில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

கோயிலில் திருமணம் மறுக்கப்பட்டதால் மண்டபத்தில் நடந்த திருநங்கை திருமணம்

திருநங்கை, திருநம்பி திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் விவாதமானது. மலபார் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டின் கீழ் காச்சாங்குறிச்சி கோயில் வருகிறது. எதிர்காலத்தில் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக அனுமதி மறுத்ததாக கோயில் நிர்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து கோயில் ஊழியர்கள் கூறும்போது, `இந்த திருமணத்துக்காக கோயிலில் முன்பதிவு செய்ய அவர்கள் இருவரும் நேரில் வரவில்லை. வேறொருவர் வந்ததால் அது திருநங்கை, திருநம்பி திருமணம் என்பது அப்போது தெரியவில்லை. அதன் பிறகு திருநர் திருமணம் என்பது தெரியவந்தது. அதுபற்றி அதிகாரிகளுக்கு அறிவிப்பு கொடுத்தோம். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திருமணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுவரை இந்தக் கோயிலில் இதுபோன்ற திருமணம் நடந்ததில்லை. பெற்றோர், உறவினர்கள் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கும் இந்தக் கோயிலில் திருமணம் செய்ய அனுமதி வழங்குவது இல்லை. இதுபோன்ற திருமணங்களால் எதிர்காலத்தில் போலீஸ் வழக்குப் போன்ற பிரச்னைகள் வருவதால் அனுமதிப்பில்லை’ எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து நிலன் கிருஷ்ணா, அத்விகா ஆகியோர் கூறும்போது, “திருநங்கை, திருநம்பியாக சமூகத்தில் பல இன்னல்களுக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். சமூகத்தின் விதிவிலக்குகள் மற்றும் பொதுமக்களின் விமர்சனங்களுக்கு அப்பால், இந்த சிறிய உலகில் குடும்ப வாழ்க்கை சாத்தியம் என்பதை நிரூபிக்க முடிவு செய்தோம். அதற்கான சுதந்திரமும் உரிமையும் எங்களுக்கு உள்ளது என்பதை நிரூபிக்க குடும்ப வாழ்க்கையில் நுழைய முடிவு செய்தோம். ஆனால், நாங்கள் விரும்பியபடி கோயிலில் வைத்து திருமணம் செய்ய முடியாதது வருத்தமாக உள்ளது” என்றனர்.

திருமண ஜோடி நிலன் கிருஷ்ணா – அத்விகா

நிலன் கிருஷ்ணா, அத்விகா ஜோடிக்கு பொது வாழ்வைத்தாண்டி தனிப்பட்ட ஒரு வாழ்க்கையை ஏற்படுத்த அவர்கள் பணிபுரியும் பின்குரூப் நிறுவனமும் முழு ஆதரவு அளித்தது.

இதுகுறித்து பின்குரூப் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ரஜிதா கூறுகையில், “இவர்களும் நம் சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது. மற்றவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கி அரவணைத்துச் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார். பின்குரூப் நிறுவனத்தில் நிலன் கிருஷ்ணா, அத்விகா போன்று பல திருநர்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.