திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபன், அங்குராஜ், கொடைக்கானல் பாஜக நகர தலைவர் சதீஷ்குமார், குழந்தைச்செல்வம், சுமதி, சந்திரன் ஆகிய 6 பேர் மதுரையில் உள்ள நிலத்தை விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்த ரெங்கநாயகி என்பவருக்கு விற்பனை செய்வதாக கூறி ரூ.70 லட்சம் முன்பணம் பெற்றுள்ளனர். ஆனால் நிலத்தை பதிவு செய்ய காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ரெங்கநாயகி தரப்பினர் அந்த நிலம் பற்றி மேற்கொண்ட விசாரணையில் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது. இதனை அடுத்து ரெங்கநாயகி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இதனை அடுத்து ரெங்கநாயகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் கொடைக்கானல் பாஜக நகர தலைவர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற ஐந்து பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்து கோவிலைக் காக்கும் பாஜகவினரே கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்க முயன்றது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.