சென்னை வில்லிவாக்கத்தில் 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் படி, கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி தொடங்கப்பட்டது.
அப்போது, சென்னை குடிநீர் வாரியம் இந்த ஏரியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக 11.50 ஏக்கர் இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதம் உள்ள இடத்தை சீரமைப்பு பணிக்காக ஒப்படைத்தது.
இந்த சீரமைப்பு பணியின் போது 1 மீட்ட ஆழம் இருந்த இந்த ஏரி 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. மேலும் இந்த ஏரியை சுற்றி நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரையரங்கம், மோனோ ரெயில் சேவை, நீர்விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சென்னையிலேயே முதல்முறையாக வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் 250 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்தில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்ணாடி பாலம் இரண்டு பேர் அருகருகே நடந்து செல்லும் வகையில் சற்று அகலமாகவும் உள்ளது.
பொது மக்கள் அந்த பாலத்தில் நடந்து சென்றபடி ஏரியின் அழகையும், கண்ணாடியின் வழியாக தண்ணீரையும் பார்க்க முடியும். இந்த பாலத்தில் 500 பேர் சென்றாலும் தாங்கக்கூடிய அளவிற்கு இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே இந்த கண்ணாடி பாலத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இருப்பினும், இந்த தொங்கு பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்கு சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஐ.ஐ.டி.யில் உள்ள என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 50 மாணவர்களுடன் சேர்ந்து கண்ணாடி தொங்கு பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதனை செய்தனர்..
அவர்கள் மேற்கொண்ட சோதனையின் ஆய்வறிக்கையை இன்னும் 15 நாட்களில் சமர்பிக்க உள்ளனர். மேலும், இந்த கண்ணாடி தொங்கு பாலம் வருகிற மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.