சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனை லிஃப்ட் பழுதுக்கு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பணியாளர் பற்றாக்குறை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவையே இதற்கு காரணம் என்று பொதுப்பணித் துறை மின் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், லிஃப்ட் பழுதானதால் உள்ளே சிக்கினார். இதைத் தொடர்ந்து, அந்த லிஃப்டை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித் துறை உதவி மின் பொறியாளர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுபொதுப்பணித் துறை மின் பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை மின் பொறியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் மின்சாதனங்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாங்கள்தான் பொறுப்பு. ஆனால், ஒரு வளாகத்தில் ஆயிரம் மின்சாதனங்கள் இருந்தால் அவற்றை அவ்வப்போது ஆய்வு செய்ய நம்மிடம் போதிய கட்டமைப்புகள் இல்லை. ஓர் உதவிமின் பொறியாளர் வழக்கமான பணிக்கு நடுவே இந்த ஆயிரம்சாதனங்களையும் பார்க்க முடியாது.
இதனால், எலெக்ட்ரீஷியன் அல்லது இதர பணியாளர்கள் மூலம் அவற்றை ஆய்வு செய்வது, அல்லது பழுதுகளை நீக்கச் செய்து, அப்பணிகளை கண்காணிப்போம். போதிய எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட சார்நிலை பணியாளர்கள் யாரும் தற்போது இல்லை. பலரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் புதியவர்கள் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசிடம் தெரிவித்துள்ளோம்.
1980-களில் அரசு கட்டிடங்களில் மின்விசிறி, மின்விளக்கு பராமரிப்புக்கு ஒரு பொறியாளரின் கீழ் 25 பேர் பணியாற்றினர். தற்போது ஏசி, ஃபிரிட்ஜ், ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவை உள்ள நிலையில் ஒரு பொறியாளரின் கீழ் 2 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, பணியாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
இடைநீக்கம் தேவையில்லை
ஒரு கட்டிடத்துக்கு அமைச்சர் வருகிறார் என்றால், அங்கு பராமரிப்புக்கு நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர் இருக்க வேண்டும் என்பது மரபு. இந்த மரபை 2 பொறியாளர்களும் பின்பற்றியுள்ளனர். லிஃப்ட் பழுதானபோது, இருவரும் அங்கு இல்லை என்றாலோ, வேறு அசம்பாவிதம் நடந்திருந்தாலோ அவர்களை இடைநீக்கம் செய்யலாம். பழுதுக்காக இடைநீக்கம் செய்திருக்க வேண்டியது இல்லை. மெமோ கொடுத்திருக்கலாம்.
24 மணிநேரமும் மின்விசிறிகள், ஏசி இயந்திரங்கள், லிஃப்ட்கள் போன்றவை இயங்கிக் கொண்டே இருக்கிற அரசு மருத்துவமனைகளில் இதுபோல எப்போதாவது நிகழும். பழுது இருப்பது தெரிந்தால் உடனடியாக சரிசெய்கிறோம்.
தவிர, லிஃப்ட், ஏசி உள்ளிட்ட சாதனங்களின் ஆண்டு பராமரிப்புக்கு அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகிறது. ஆனால், அந்ததொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, அந்த தொகைக்குள் வரும் நிறுவனங்களை மட்டுமே ஆண்டு பராமரிப்புக்கு அனுமதிக்க வேண்டியுள்ளது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
பொதுப்பணித் துறையில் கட்டிட பிரிவு பொறியாளரே எங்கள் பிரிவையும் கவனிக்கிறார். இதனால், எங்கள் குறைகள், பணி பற்றிய விவரங்களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மின் பொறியாளர் பிரிவுக்கு தனியாக தலைமை பொறியாளரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.