சென்னை: சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று சென்னை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை செப்டம்பர் மாதம் சி40 அமைப்பு வெளியிட்டது. இதில் “நெகிழ் திறன், உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகள் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு இருந்து.
குறிப்பாக, இந்த அறிக்கையில் கடல் மட்டம் உயர்வால் 2100-ம் ஆண்டில் சென்னையில் 16 சதவீத பகுதிகள் கடலில் முழ்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 28 பேருந்து நிறுத்தங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள், 4 புறநகர் ரயில் நிலையங்கள், 2 மின் நிலையங்கள் கடலில் முழ்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 400 பேர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துகளை பரிசீலனை செய்து இறுதி வரைவு அறிக்கை தயார் செய்யும் பணியில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன்படி, சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட இறுதி வரைவு அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.