ஜி-20 மாநாடு: தாமரை சின்னத்தை பயன்படுத்த மம்தா பானர்ஜி எதிர்ப்பு!

ஜி – 20 மாநாட்டின் சின்னமாக தாமரையை பயன்படுத்தக் கூடாது என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

ஜி – 20 உச்சி மாநாடு இந்தோனேஷிய நாட்டின் பாலி நகரில், கடந்த நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. இரண்டாவது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி – 20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜி – 20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி – 20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம்” என கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஜி – 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி, மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பு, கொல்கத்தா விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:

டெல்லியில் ஜி – 20 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு எதுவும் கிடையாது. இது ஜி – 20 மாநாட்டுக்கான சந்திப்பு மட்டுமே ஆகும். நமது தேசிய மலராக தாமரை உள்ளது என்ற போதிலும், அது அரசியல் கட்சி ஒன்றின் சின்னமும் ஆகும். அதனால், ஜி – 20 மாநாட்டுக்கான சின்னமாக தாமரை மலர் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் இருந்தன.

வாக்களிக்கும் தினத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட்சியினர் வி.வி.ஐ.பி.க்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அவர்களை எல்லாம் மன்னித்து விடுவார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

இதற்கிடையே, வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 3 நாட்கள் மேகாலயா மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.