ஜெ நினைவு தினம்: ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்

மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலலாளருமான ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். “அதிமுக தலைவரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை வகுத்துத் தந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அதனை நிறைவேற்றிவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த விதியை சதியை துணையாகக் கொண்டு தன்னலத்திற்காக மாற்றியுள்ள சர்வாதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதோடு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் தொண்டர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீட்டெடுத்து சர்வாதிகார போக்கிற்கு முடிவு கட்டுவோம் என சபதம் ஏற்கிறோம்.

தம் மக்கள் யாரிடத்திலும் எதற்காகவும் கையேந்தி நிற்காமல் இருக்க ஆயுளை அர்ப்பணித்த, மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற மந்திர மொழியை தன் வாழ்நாள் பிரகடனமாக ஆக்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்திய ஆட்சியை மீண்டும் அமைக்க சபதம் ஏற்போம்.

பெண்ணின வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்று இலக்காகக் கொண்டு மிதிவண்டி, தாலிக்கு தங்கம், விலையில்லா அரிசி, பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா வழங்கினார். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் திமுக அரசு அவற்றை ரத்து செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதே வேளையில் ஜெயலலிதாவின் கருணை மிக்க ஆட்சியை திரும்பிக் கொண்டு வர உறுதியேற்கிறோம்.

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற கொள்கையினால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிக மக்களவை உறுப்பினர்களை வெற்றி பெற வைத்து தமிழக உரிமைகளை பெற்று வருவதில் ஜெயலலிதா மாபெரும் வெற்றி கண்டார். அந்த வழியில் வருகின்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற கடுமையாக களப் பணியை தொடங்குவோம். ஆளுமை, மதி நுட்பம், சீரிய திட்டங்களால் அதிமுக தொண்டர்களை ஓரணி திரட்டி ஒற்றுமை பறைசாற்றி பல வெற்றிகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுக் கொடுத்தார். அவ்வழியில் நாமும் பயணித்து வெற்றி பாதையில் அதிமுகவை அழைத்துச் செல்வோம் என உறுதி ஏற்கிறோம்” என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். சசிகலா, டிடிவி தினகரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.