கோவை அடுத்த அன்னனூர் பகுதியில் டிட்கோ மூலம் ஜவுளி பூங்கா அமைக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்னூரில் இருந்து கோவை புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு நடை பயணம் மேற்கொண்டனர். இந்த நடைப்பயனத்தில் ஜவுளி பூங்கா அமைய உள்ள குப்பனூர், வடக்கலூர், பொகலூர், இலுப்பந்தம், பள்ளிபாளையம், செங்கம்பள்ளி ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கொண்டுவரும் இந்த ஜவுளி பூங்காவால் ஆறு ஊராட்சிகளை சேர்ந்த 3700 ஏக்கர் பரப்பிலான விவசாய விளைநிலம் கையகப்படுத்த உள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த ஜவுளி பூங்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிர்த போராட்டம் என பலதரப்பட்ட முறையில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்த விவசாயிகள் இன்று அன்னனூர் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து கோவை புலியகுளம் விநாயகர் கோவில் வரை 34 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டனர்.
இந்த நடை பயணத்தின் முடிவில் புலியகுளம் விநாயகரை தரிசித்த விவசாயிகள் டிக்கோ மூலம் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என விநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.