பெங்களூரு: புற்றுநோய்க்கு, கைக்கெட்டும் கட்டணத்தில் சிகிச்சை பெற வசதியாக, 42 மருந்துகளின் விலைக்கு, கட்டுப்பாடு விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை, கர்நாடக உயர்நீதிமன்றம் வரவேற்றது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தள்ளுபடி செய்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். எனவே புற்றுநோயை கட்டுப்படுத்த பயன்படுத்தும் 42 விதமான மருந்துகளின் விலைக்கு, கட்டுப்பாடு விதித்தது. 30 சதவீதம் சலுகை விலையில் மருந்துகள் வழங்கும்படி, 2019 பிப்ரவரி 27ல், மத்திய அரசு உத்தரவிட்டது.
இது குறித்து, கேள்வி எழுப்பி ‘ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ் லிமிடெட்’ நிறுவனத்தின், பெங்களூரு கிளை பிரதிநிதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனு தொடர்பாக, விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் கூறியதாவது:
புற்றுநோய் போன்ற கொடுமையான நோயை குணப்படுத்த பயன்படும் மருந்துகளின் விலையை, கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஏழைகளின் உயிருக்கு, பாதிப்பு ஏற்படும்.
மக்களின் நலனுக்காக, அரசுகள் சட்டம் வகுக்கின்றன. மக்களுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை எடுக்க, அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
புற்றுநோய் மருந்துகளின் விலைக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசின் நடவடிக்கை சரிதான்.
ஐ.நா., சபையின் புள்ளி விபரங்களின் படி, புற்றுநோய் கடுமையான நோயாகும். இந்த நோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகம்.
எதிர் வரும் நாட்களில், இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், ஏழைகளின் கைக்கு எட்டும்படி இருக்க வேண்டும். இவ்வாறு கருத்து தெரிவித்து, நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்