`வாக்கு சேகரிக்க மது விநியோகம்…’- தேர்தல் ஆணையத்திடம் பாஜக-வை சாடிய டிம்பிள் யாதவ்

உத்தரபிரதேசத்தில் மணிப்பூரி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், அங்கு சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரான டிம்பிள் யாதவ் ட்விட்டர் வழியாக பாஜக வேட்பாளர்களை நேற்று இரவு கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த மாதம் முலாயம் சிங் யாதவ் மரணம் அடைந்ததால், உ.பி-யின் மணிப்பூரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் முலாயம் சிங் யாதவ்வின் மூத்த மருமகள் டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி கட்சியால் தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் பாஜகவின் ரகுராஜ் சிங் ஷக்யாவை எதிர்த்து களத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) காங்கிரஸும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
image
டிம்பிள் யாதவின் கணவர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவிக்காக கடுமையாக வாக்கு சேகரித்து வந்தார். இருப்பினும் முலாயம் சிங் யாதவ்-வின் குடும்பத்தினர் என்பதால் இவர்களுக்கு வாக்கு வங்கி அப்பகுதியில் அதிகமிருப்பதாக கணிக்கப்படுகிறது. இதனால் வாக்கு சேகரிப்பில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டும் எழுந்தது. இப்படியான சூழலில்தான் நேற்று இரவு டிம்பிள் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை நேற்று முன்வைத்துள்ளார். அதில் அவர், “பாஜக-வினர் வாக்குக்காக தொடர்ந்து மதுவும் பணமும் மக்களுக்கு விநியோகித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
image
அப்பதிவில் மேலும் அவர், “நூற்றுக்கணக்கான பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மணிப்பூரியின் ஸ்டேஷன் சாலையிலுள்ள ஹோட்டல் பாம்-ல் கூடி, தொடர்ந்து மதுபானம் மற்றும் பணத்தை விநியோகித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்” என்றுகூறி தேர்தல் ஆணையத்தையும் டேக் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இச்சம்பவம் அங்கு கவனம் பெற்றுள்ளது.

होटल पाम, स्टेशन रोड, मैनपुरी में सैकड़ों की संख्या में भाजपा नेता, कार्यकर्ता इकट्ठे होकर निरंतर शराब और पैसा बंटवा रहे हैं।

मामले का संज्ञान ले चुनाव आयोग। @ceoup @ECISVEEP
— Dimple Yadav (@dimpleyadav) December 4, 2022

இதுவொருபுறமிருக்க மணிப்பூரில் 6 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆறு பேரும், பண விநியோகம் மற்றும் மது கொடுத்தல் ஆகியவற்றுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.51,000 மற்றும் மொபைல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் மீது 171 H (தேர்தல் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்றம்) மற்றும் 188 (முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இப்படியான சலசலப்புக்கு இடையே இன்று மணிப்பூரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் யார் வெற்றி பெறுவர் என்பது, டிச.8 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தெரியவரும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.