வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வூஹான்: கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததாகவும், அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அங்கிருந்து படிப்படியாக உலக நாடுகளுக்கு பரவியதுடன், கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.
இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது எனவும், வேண்டுமென்றே சீனா பரவவிட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதற்கு சீனா தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்’ என்ற திடுக்கிடும் தகவலை சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் சீனாவில் அமைந்துள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான ‘வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில்’ பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் எழுதிய ‘வூஹான் பற்றிய உண்மை’ என்ற புத்தகத்தின் சில பகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி அங்கு நடத்தப்பட்டன. இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. ஒரு வகையில், இதற்கு அமெரிக்க அரசு தான் காரணம்.
இத்தகைய ஆபத்தான ‘உயிரி தொழில்நுட்பத்தை’ சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம். உயிரி ஆயுதம் குறித்த தொழில்நுட்பம்(பயோ வெப்பன்) சீனர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம். கொரோனா வைரஸ் மனிதனால் ‘மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது’ என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரிந்த விஷயமே. இவ்வாறு விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement