பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் மசோதா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இதில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உட்பட இரண்டு நீதிபதிகள், மசோதாவுக்கு எதிராகவும், மூன்று நீதிபதிகள் மசோதாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததையடுத்து, EWS பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் இந்த விவகாரத்தில் தி.மு.க, அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக சீராய்வு மனுத்தாக்கல் செய்வது என தீர்மானம் கொண்டுவந்தது. அதேசமயம் அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் இதில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் தி.மு.க சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.க இந்த சீராய்வு மனுவில், `இந்த இட ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த இந்திய குடிமக்களுக்கும் எதிரானது. மேலும் இது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்குவதாக இருக்கிறது. அதோடு, அரசியல் சாசனம் வழங்கியிருக்கக் கூடிய அடிப்படை விதிமுறைகளுக்கு எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினரைப் புறந்தள்ளிவிட்டு கொண்டுவரப்பட்டிருக்கும் இதனை உடனடியாக சட்ட விரோதம் என அறிவிக்கவேண்டும். எனவே இந்த வழக்கை திறந்தவெளி நீதிமன்ற விசாரணையாக நடத்தவேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்திருக்கிறது.