குஜராத் மாநிலத்தை 1995ஆம் ஆண்டில் முதல் பாஜக ஆட்சி செய்துவரும் நிலையில், மீண்டும் இம்முறையும் மகத்தான வெற்றியைப் பெற உள்ளது. தற்போது வரை Zee News – BARC உள்பட நான்கு கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளது. அவை அனைத்தும் பாஜகவே முன்னிலை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், பல மாதங்களாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி – மாநிலத்தில் சில இடங்களை மட்டும் கைப்பற்றும் என்றும் அவை கணித்துள்ளன.
தற்போது வரை வெளியாகியுள்ள நான்கு கருத்துக்கணிப்புகளும் மொத்தமாக, பாஜக 131 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது. பாஜக 2018இல் நடந்த கடந்த தேர்தலில், 99 இடங்களை மட்டுமே வென்றது. அதுதான் குஜராத்தில் பாஜக குறைந்த தொகுதிகளை வென்றிருந்தது. அங்கு மொத்தம் 182 தொகுதிகள் உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
கருத்துக்கணிப்பு புள்ளிவிவரங்கள்
Zee News – BARC ஒட்டுமொத்த குஜராத் தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் பாஜக 110-125 இடங்களையும், காங்கிரஸ் 45-60 இடங்களையும், ஆம் ஆத்மி 1-5 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றவை கட்சிகள் 0-4 இடங்கள் வெல்லும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவுக்கு பின்னான இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி 41 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெறும் என NDTV-இன் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Republic TV-P MARQ கருத்துக்கணிப்பில் அதிகபட்சமாக பாஜக 128-148 தொகுதிகளை வெல்லும் என கணித்துள்ளது. காங்கிரஸ்-என்சிபி 30 முதல் 42 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. கடந்த முறை, காங்கிரஸ் பெற்ற 77 இடங்களை விட இது குறைவு. 2018இல் எந்த இடத்திலும் வெற்றி பெறாத ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் 2 முதல் 10 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
News X- Jan Ki Baat தரவுகளின்படி, பாஜகவுக்கு 117-140 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 34-51 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 6-13 இடங்களும் கிடைக்கும். TV9 குஜராத்தி பாஜகவுக்கு 125-130 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 40-50 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 3-5 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
குஜராத் மட்டுமின்றி பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேசத்திலும் அக்கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.