வேகமெடுக்கும் பரந்தூர் விமான நிலைய பணிகள் – தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயாரிக்க தீவிரம்

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை தயாரிக்க ஆலோசகரை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வெளியிட்டுள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பயணிகள் எண்ணிக்கை, சரக்குகள்கையாளும் திறன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டும், பொருளாதார திறன் மேம்பாட்டைக் கருதியும் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரந்தூரில், 4,700 ஏக்கர் பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அங்குள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், தமிழகத்தின் பொருளாதார எதிர்காலத்தைக் கருத்தில் கொள்வதோடு, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதாவது, நிலத்துக்கு உரியமதிப்பு, வேலைவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்டவற்றை வழங்கி நிலத்தை எடுக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

இதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அரசு நிலம் துறை மாற்றம், நில எடுப்புக்கான அடிப்படை கோப்புகளை தயாரித்தல் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் நில எடுப்பு பணிகளை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இத்திட்டத்தை செயல்படுத்த பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) இத்திட்டத்துக்கான தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை அளிப்பதற்கு தகுதியான நிறுவனத்தை தேடி வருகிறது. இதுகுறித்த ஒப்பந்தப்புள்ளியை டிட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘சென்னை அருகில் உள்ள பரந்தூரில் அமைய உள்ள புதிய கிரீன்பீல்டு விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டிட்கோவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான அனுமதிகளைப் பெற உதவி செய்யவும், விமான நிலையத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்குத் தேவையான ஒப்பந்தப் பணிகளை மேலாண்மை செய்ய உதவி செய்யும் வகையிலும் விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையைத் தயாரித்து அளிப்பதற்கான ஆலோசகரை தேர்வு செய்ய டிட்கோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்த தேர்வில் பங்கேற்கலாம்’’ என டிட்கோ மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.