நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின், மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் மறைந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆகிறது. துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி (55). இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.
பாரதியின் கணவர் ராஜ்குமார், காட்பாடி பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (டிச. 4) வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறை விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எண்ணத்தை கைவிடுக
தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.
பாரதி மறைவையொட்டி, காட்பாடி பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், டிச. 4ஆம் தேதி காலை 11 மணியளவில் இயற்கை எய்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவரை தற்கொலை செய்துகொண்டுள்ளது போலீசார் விசாரணையில்தான் தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்னையா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த பாரதியின் இறுதிச்சடங்கு, அப்பகுதியில் உள்ள கண்ணமங்கலம் நாகநதி தென்கரைில் நடைபெற்றதாகவும் தெரிகிறது. அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.