அம்பேத்கருக்கு காவி சட்டை… கோர்ட்டில் உத்தரவாத கடிதம் கொடுத்த அர்ஜூன் சம்பத்!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது, தமக்கு பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம்’ என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

மேலும், ‘அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன்’ எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் தமது உத்தரவாத கடிதத்தில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் சம்பத்தின் எழுத்துபூர்வமான இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதாகவும், சாதி ஒடுக்கு முறைகளின் காரணமாக இந்துவாக சாகமாட்டேன் என்று தன் வாழ்நாளில் பிரகடனம் செய்தவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் என்று கூறுகிறது அவரது வரலாறு.

இந்த நிலையில், அவரது 66 ஆவது நினைவு நாளான இன்று காவி உடையுடனும், விபூதி, குங்குமம் வைத்தும் அம்பேத்கரை சித்தரித்து, காவி(ய) தலைவன் என்ற பேரில் இந்தி மக்கள் கட்சி சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கும்பகோணத்தில் அக்கட்சியை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் இந்த செயலுக்கு சென்னை வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அத்துடன், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரி அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த அவர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த முயற்சித்துள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள் அவரை தடுத்தும் நிறுத்தினர். பின்னர், அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டியதற்கு கண்டங்களை தெரிவித்ததுடன், அர்ஜூன் சம்பத்துக்கு எதிரானவும் வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அர்ஜூன் சம்பத்தை பாதுகாப்பாக மீட்டு, நீதிமன்றத்துக்குள் அழைத்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.