'அவர் இருந்தால் பாஜக அவ்வளவுதான்…' கட்சிக்கு டாட்டா காட்டிய திருச்சி சூர்யா!

திமுகவைச் சேர்ந்த எம்.பி., திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்தார். இவர், தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவரான டெய்சி சரணை ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. 

மேலும் அந்த ஆடியோவில், ‘நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ. என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன்’ என சூர்யா கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ தமிழக பாஜகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி தலைமை இந்த ஆடியோ தொடர்புடைய சூர்யா, டெய்சி ஆகிய இருவருரிடமும் விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து, சூர்யா, டெய்சி இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது தங்களுக்குள் இருந்த பிரச்னைகளை சுமூகமாக முடித்துக்கொள்கிறோம் என்றும் கட்சி தன் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவேன் என்றும் சூர்யா விளக்கம் அளித்தார். தொடர்ந்து, பிரச்னைக்கு முன் தாங்கள் அக்கா – தம்பி போன்றே இருந்தோம் என்றும் கசப்பான சூழ்நிலையில் இப்படி நிகழ்ந்துவிட்டது எனவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, நேரடியாகவும் தான் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார். 

இருப்பினும், சூர்யாவை கட்சி பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு விடுவிப்பதாக தமிழ்நாடு  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதற்கும் சூர்யா, தன்மீது தலைவர் அண்ணாமலை எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் மீண்டும் அவர் நம்பிக்கையை பெற்று மீட்டு வருவேன் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

அதை அடைய வேண்டும் என்றால் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

டெய்சி சரண் – திருச்சி சூர்யா ஆடியோவுக்கு இடையில்,இருவருக்குமிடையேயான ஆடியோவில் தமிழக பாஜகவின் அமைப்பு செயலாளரான கேசவ விநாயகத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து அவரை மட்டும் ஏன் தண்டிக்கவில்லை என கேள்வியும் பலரால் முன்வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் டெய்சி அளித்த பேட்டி ஒன்றில், கேசவ விநாயகம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கேசவ விநாயகம் எப்படிப்பட்டவர் என்றால் அவருக்கு முன் ஒரு பெண் நிர்வாணமாக நின்றால்கூட திரும்பி பார்க்கமாட்டார்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.