எடப்பாடியுடன் கூட்டணி? காலத்தின் கட்டாயம் – டிடிவி தினகரன் தகவல்!

திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் தெரிவித்திருந்தார். அமமுக என்ற தனி கட்சியை தொடங்கி நடத்தி வரும் டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்றுவதே இலக்கு எனவும், அதிமுகவை மீட்டெடுப்போம் எனவும் கூறி வந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என அவர் தெரிவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமமுக வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருவதாலும், முக்கியத் தலைவர்கள் அதிமுக, திமுகவில் ஐக்கியமாகி விட்டதாலும், இனியும் தனித்து களமாடினால் சரிவராது என கணித்ததாலேயே அதிமுக கூட்டணியில் இணையத் தயார் என பகிரங்கமாக அறிவித்ததாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது.

ஆனால், “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி. அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது.” என

திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள டிடிவி தினகரன், “கூட்டணி வைக்க பாஜக, காங்கிரஸ் என இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. இரண்டில் ஒன்றுடன் கூட்டணி வைப்போம். ஒத்துவரவில்லை எனில் தைரியமாக தனித்தும் நிற்போம்.” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “எனது உயரம் எனக்கு தெரியும். எனவே, அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும். அக்கூட்டணி பிரதமர் பெயரை சொல்லும் கூட்டணியாக இருக்க வேண்டும். திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.” என்று அழைப்பு விடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என தெளிவுபடுத்திய டிடிவி தினகரன், ஆனால் கூட்டணி அமைப்பது என்பது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார். ஜி20 ஆலோசனை கூட்டத்துக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், அதுகுறித்து மத்திய அரசையும், பன்னீர் செல்வத்தையும்தான் கேட்க வேண்டும். எனக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அமமுக என்ற வேறு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளில் இபிஎஸ் அணியினர் எடுத்த உறுதிமொழி தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்த டிடிவி தினகரன், “அம்மா மறைந்த நன்நாளில் என்று உறுதி மொழி ஏற்றதில் இருந்தே அவர்களது மனநிலை தெரிகிறது. அவர்கள் யார் என்பது அம்மா நினைவு நாளில் வெளிப்பட்டுள்ளது.” என்றார். மேலும், இபிஎஸ் அணியினரிடம் ஒற்றுமை இல்லை. குழம்பிய மனநிலையில் அவர்கள் இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை தமிழகத்தில் கனிசமான தொகுதிகளை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் திட்டத்துக்கு, அதிமுக பிரிந்து கிடப்பது கைகொடுக்காது. எனவே, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை இணைத்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது.

அதன்படி, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படிதான், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்த்த டிடிவி தினகரன், அதிமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைக்க தயார் என அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.