அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி vs ஓ.பன்னீர்செல்வம் என்ற நிலை நீடித்துவருகிறது. காலம் செல்ல செல்ல இருவரும் ஒன்றிணைவார்கள் என தொண்டர்கள் காத்திருக்க இருவருக்கும் விரிசலே அதிகமாகி இருக்கிறது. சூழல் இப்படி இருக்க அதிமுக, செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இதையடுத்து அவருக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
சுமூகமாக சென்றுகொண்டிருந்த இருவருக்குமிடையேயான உறவு சமீபமாக சரியில்லை என கூறப்பட்டது. ஆனால் இருவரும் இதுகுறித்து மௌனம் காத்தே வந்தனர். அதேசமயம் கடந்த சில நாள்களாகவே பன்னீர்செல்வம் அணி சார்பில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் பங்கேற்காமல் இருந்துவந்தார். இதனால் அவர் ஓபிஎஸ்ஸுடனான கருத்து வேறுபாடு உறுதியாகிவிட்டதாகவும், ஓபிஎஸ் அணியிலிருந்து அவர் விரைவில் விலகிவிடுவார் எனவும் கூறப்பட்டது.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோவை மாவட்டத்தை 4ஆக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் பதவி பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவின் ஓபிஎஸ் அணியிலிருந்து தான் விலகிவிட்டதாக அறிவித்தார். இதனையடுத்து திமுகவில் அவர் இணையலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைகிறார். நாளை காலை 10.30 மணிக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்கிறார். முன்னதாக, ஓபிஎஸ் அணியிலிருந்து அவர் விலகும்போது சுயநலமிக்கவர்கள் மத்தியில் இருக்க விரும்பவில்லை அதனால் விலகுகிறேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.