`கல்வி, வேலை, அரசியலில் இடஒதுக்கீடு வேண்டும்!’ அம்பேத்கர் நினைவுநாளில் திருநர்கள் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாளில் கல்வி,வேலைவாய்ப்பு, அரசியல் என அனைத்திலும் திருநங்கை, திருநம்பி என அழைக்கப்படும் திருநர்களுக்கும் சமபங்கீட்டு வழங்க வேண்டும் என திருநர் உரிமை கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
“இன ஏற்றத் தாழ்வும் பாலின ஏற்றத் தாழ்வும் இந்து சமூகத்தை பிடித்துள்ள பெரும் பிணியாகும். இதை அப்படியே விட்டுவிட்டு பொருளாதார பிரச்சினைகள் சம்மந்தபட்ட சட்டங்களை இயற்றிக் கொண்டே போவது நமது அரசியல் சாசனத்தை கேலிக் கூத்தாக்குவதாகும். சாணிக் குவியலின் மீது அரண்மனையைக் கட்டுவது போலாகும்!” என்று அண்ணல் அம்பேத்கர் கூறியவற்றை மேற்கோள் காட்டி பாலின சமத்துவத்திற்கான கோரிக்கையை திருநர் சமூகத்தினர் இன்று வைத்துள்ளனர்.
image
தங்களின் கோரிக்கையில் அவர்கள் சொல்வது – ”இந்திய அரசே…..தமிழக அரசே….. இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் அண்ணல் கூறிய மேற்கூறிய வாசகங்களை நினைவில் கொண்டு திருநர்களை உள்ளடக்கிய பாலின சமத்துவத்தை முன் வைக்கவும், நமது ஒன்றியத்தில் திருநர்களுக்கு கல்வி,வேலை,அரசியலில் இடப்பங்கீடு வழங்கவும் கோருகிறோம்! இதுவே அண்ணலின் நினைவு நாளில் திருநர் மக்களான எங்களின் கோரிக்கை!” என்று தெரிவித்துள்ளனர்.
image
திருநர் உரிமை கூட்டமைப்பு சார்பாக, இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தோட்டம் திருநங்கை நகரில் அமைந்திருக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த போது புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம் ஜெய் பீம் என்ற கோஷம் முழங்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.