காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துச்சென்ற பெற்றோர் – டிவிஸ்ட் வைத்த மகள்!

காதலனை மறக்க தனது பெற்றோர் கல்வராயன் மலைக்கு அழைத்துச்சென்று மந்திரவாதியிடம் மாந்திரீகம் செய்து கொலை மிரட்டல் விடுவதாக, கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்டு கழுத்தில் தாலி மாலையுடன் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஸ்ரீராமகிருஷ்ணன். இவர் பிஎஸ்சி பட்டதாரி. குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விஷயம் ஜெயஸ்ரீயின் தந்தை வெங்கடேசன் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, ஜெயஸ்ரீயை கல்வராயன் மலைக்கு அழைத்துச்சென்று காதலனை மறக்க மாந்திரீகம் செய்து மருந்து கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்காத ஜெயஸ்ரீ பெற்றோரிடம் ஸ்ரீராமகிருஷ்ணனை தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் ஜெயஸ்ரீயின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
image
இதனையடுத்து, ஜெயஸ்ரீ, தன்னுடைய காதலனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். உடனே காதலர்கள் இருவரும் முடிவு செய்து தேங்காய்நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.
மனுவைப் பெற்ற எஸ்.பி பகலவன், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், காதலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்ததன்பேரில் அங்கிருந்து சென்றுள்ளனர். கல்லூரி மாணவி காதலனுடன் எஸ்.பி அலுவலகத்தில் மாலை தாலியுடன் தஞ்சமடைந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.