டெல்லி: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக நவம்பர் மாதம் தொடங்கியது. அக்டோபர் முதல் இதுவரை பெய்த மழை அளவு, தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையைவிட 3% குறைவு. இருப்பினும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இன்று மாலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வரும் 8ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.