கொடி நாளில் பெருமளவில் நிதி வழங்கிடுக: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 

சென்னை: “கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்துத் தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, முப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி: “இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னதத் திருநாள், இந்தக் கொடிநாள்.

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாட்டின் அத்தனை பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தமச் செயலை சமரசம் செய்து கொள்ளாமல், உயிரைத் துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ணச் சிறகுகளையெல்லாம் ஒடுக்கி, ஆசைகளையெல்லாம் குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் மகத்தான கடமை.

படை வீரர்களின் வாழ்க்கை, ‘நம் இல்லத்தைப் பார்த்துக்கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது’ என்கிற நன்னம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி. அது அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகைகளில் பயன் தரும்.

கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்துத் தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 7-ம் தேதி கொடிநாள் கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் படைவீரர் நலத்துறை, உயிரிழந்த படைவீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், மாற்றுத்திறன் கொண்ட படை வீரர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றுக்கும் தொடர்ந்து உதவிசெய்து வருகிறது. படை வீரர்கள் கொடி நாள் நிதியிலிருந்து இந்த உதவிகள் செய்யப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.