புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சத்துணவு முட்டை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று முதல் சத்துணவுடன் முட்டை வழங்கும் மீண்டும் திட்டம் துவக்கப்பட்டது. இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை மதிய உணவு துணை இயக்குனர் கொஞ்சி மொழி குமரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின் அனைத்து பள்ளிகளுக்கும் முட்டை அனுப்பி வைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
துணை இயக்குனர் கொஞ்சி மொழி குமரன் கூறியதாவது:
மத்திய உணவு திட்டத்தினை பொறுத்தவரை,கடந்த கல்வியாண்டில் மே மாதம் வரை மதிய உணவில் முட்டை வழங்கப்பட்டது.நடப்பாண்டில் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் சற்று தோய்வு ஏற்பட்டது.தற்போது அனைத்து சிரமங்களும் களையப்பட்டு மீண்டும் சத்துணவுடன் முட்டையும் வழங்கும் பணியை துவக்கியுள்ளோம்.அனைத்து மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டைகள் வழங்கப்படுகிறது.
மொத்தம் 293 பள்ளிகளுக்கு முட்டை அனுப்பப்பட்டுள்ளது.முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும், மறுநாள் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் முட்டை கொடுக்கப்பட உள்ளது. 293 பள்ளிகளுக்கு வாரத்திற்கு ஒரு லட்சம் முட்டைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement