சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனை அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்!
வங்கக் கடலின் தெற்கு அந்தமான் கடற்பகுதி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் கன மற்றும் மிக கனமழை இருக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும், வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் எந்த இடத்தில் கரையை கடக்கும் போன்ற பல்வேறு தகவல்களை தென் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மழையால் பாதிக்கும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனையில் கடலுக்குச் சென்ற மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்துவது, வரும் டிசம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தில் எங்கெல்லாம் அதிக கன மழை பெய்யுமோ அந்த மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைப்பது, மருத்துவ மையங்களை தயார் செய்வது, மழை வெள்ளத்தில் மீட்கப்படும் மக்களை தங்க நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் வாயிலாக வரக்கூடிய நாட்களில் தமிழக அரசு மழையின் தீவிரத்தை அறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரம் காட்டுவது தெரியவந்துள்ளது.