தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் நடத்திய அடிப்படை கற்றல் குறித்த ஆய்வில், தாய் மொழி தமிழில் தமிழக மாணவர்கள், உத்திர பிரதேசத்தை விட கீழ் சென்றுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் 86 ஆயிரம் மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 336 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்பட்டன.
அதில், 20% மாணவர்களால் தான் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது;
சுமார் 50% மாணவர்களால் தமிழை பிழையில்லாமல் படிக்கக் கூட முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.
கேரளம், கர்நாடகத்தில் 44% மாணவர்களாலும்,
ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் 45% மாணவர்களாலும் தாய்மொழியை நன்றாக புரிந்து கொள்ளவும், படிக்கவும் முடியும் நிலையில், தமிழக மாணவர்கள் தான் மிகவும் பின்தங்கி உள்ளனர்.
தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 52 விழுக்காட்டினருக்கு நாள்காட்டியில் நாள், கிழமை, மாதம் ஆகியவற்றைக் கூட அடையாளம் காணமுடியவில்லை. கணிதத் திறனிலும் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை விட உயர்ந்த நிலையில் உள்ளதை அந்த ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
முன்னதாக ஆசர் எனப்படும் கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கையின்படி,
2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 17.70 விழுக்காட்டினரால் மட்டும் தான் இரண்டாம் வகுப்புக்கான தமிழ் பாடங்களை படிக்க முடிந்தது. இது 2018-ஆம் ஆண்டில் 10.20% ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.