புதுடில்லிபயங்கரவாதத்தை தடுக்க கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.
நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.
துர்க்மெனிஸ்தான் சார்பில் இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் பங்கேற்றார்.
கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது:
மத்திய ஆசிய நாடுகளை எங்களுடைய விரிவுபடுத்தப்பட்ட அண்டை நாடுகளாகவே பார்க்கிறோம்.
நம் நாடுகளுக்குள் பொதுவான கலாசார, நாகரிக ஒற்றுமைகள் உள்ளன. அதுபோல பயங்கரவாதப் பிரச்னையையும் நாம் அனைவரும் சந்தித்து வருகிறோம்.
இந்தப் பிரச்னையை நாம் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். நிதிஉதவி கிடைப்பது தான் பயங்கரவாதம் வளர்ச்சி பெற முக்கிய காரணமாகும். அதனால், நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், நமக்குள்ள மிக முக்கியமான பிரச்னையாகும்.
அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளைத் தவிர, பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளும் ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி வருகின்றன. இது நம் அனைவருக்கும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும்.
இதனால், நாம் அனைவரும் அதிக ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்; நம்மிடையே தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும்.
இதற்கு தேவையான அனைத்து உதவிகள், முதலீடுகள் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்