
பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வது தொடர்பாக கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்துவருகிறார்கள்.
அத்தகையோரை தண்டிக்க, பிரித்தானியாவில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள்
சட்ட விரோதமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பாக, கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்து வருகிறார்கள்.
’வெற்றி’ என்பது போல கைகளை உயர்த்திக் காட்டியபடி, படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரைக் காட்டும் வீடியோக்களும், பிரித்தானியாவுக்குள் எளிதாக நுழைவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் புகைப்படங்களும், டிக் டாக் முதலான சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த விளம்பரங்களைக் காண்போர், பிரித்தானியாவுக்குள் எளிதாக நுழைந்துவிடலாம் என்று தவறாக நம்பி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் படகுகளில் பயணிக்க முன்வரக்கூடும்.
சட்டதிருத்தம் ஒன்றைக் கொண்டுவர முன்வைக்கப்பட்டுள்ள திட்டம்
இந்நிலையில், ஒன்லைன் பாதுகாப்பு மசோதா தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றின்போது, Dover தொகுதி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Natalie Elphicke, சட்டதிருத்தம் ஒன்றைக் கொண்டுவர திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
அந்த சட்டதிருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஒன்லைனில், அதாவது டிக் டாக், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில், நவயுக அடிமைத்தனம் அல்லது சட்டவிரோத புலம்பெயர்தல் தொடர்பாக விளம்பரங்கள் செய்வது குற்றமாக கருதப்படும்.