கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனசரகமான ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, கவி அருவி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசியக்கூடிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வந்தது. ஒற்றை யானையை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட யானை கடந்த சில நாட்களாக காட்டுப்பகுதியில் இருந்தது. இந்த நிலையில் காட்டூர் கால்வாய் வழியாக பட்டர்பிளை பார்க் அருகே வந்து ஒற்றை யானை முகாமிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடியது. இதனால் அச்சமடைந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறையினர் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு ஒற்றைக் காட்டு யானை வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.