போலி பலாத்கார வழக்கு, ரூம் போட்டு மிரட்டல்… ரூ.80 லட்சம் பறித்த பிரபல பெண் யூ-டியூபர் கைது

குருகிராம்,

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் (வயது 22). இவரது கணவர் மணீஷ் என்ற விராட் பெனிவால். நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இவருக்கு 6.17 லட்சம் பின்தொடர்வோர் உள்ளனர்.

இந்த நிலையில், பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (வயது 21) என்ற வாலிபர், நம்ரா மீது மிரட்டி பணம் பறித்தல் புகாரை போலீசில் அளித்து உள்ளார்.

இதன்படி, போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தினேஷ் சில மாதங்களுக்கு முன்பு நம்ராவை ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளார். நம்ராவுடன் பெனிவாலும் இருந்துள்ளார்.

நம்ராவின் சேனலில் தனது விளம்பர நிறுவனம் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் என தினேஷ் கேட்டுள்ளார். அதற்கு நம்ரா ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளார். அதன்படி, தினேசும் கொடுத்துள்ளார். பின்பு, நம்ரா ரூ.50 ஆயிரம் கேட்டு வாங்கியுள்ளார்.

ஒரு சில நாள் சென்ற பின்னர், விளம்பர வேலை எதுவும் நடைபெறாத நிலையில், நம்ராவிடம் தினேஷ் அதுபற்றி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு நம்ரா, தினேசை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன்பின்னர், அவர்கள் நண்பர்களானார்கள் என புகாரில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆகஸ்டில், நம்ரா காதிர் மற்றும் மணீஷ் உடன் சேர்ந்து தினேஷ் கிளப் ஒன்றில் விருந்தில் பங்கேற்க சென்றுள்ளார். இரவில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் காலையில், எழுந்த தினேஷிடம் அவரது வங்கி அட்டைகள் மற்றும் கைக்கெடிகாரம் உள்ளிட்டவற்றை நம்ரா கேட்டுள்ளார். தராவிட்டால் போலியான பலாத்கார வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் தினேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், தொடர்ந்து மிரட்டி ரூ.80 லட்சத்திற்கும் கூடுதலாக பணம் மற்றும் பரிசு பொருட்களை தினேஷிடம் இருந்து நம்ரா கறந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரூ.5 லட்சம் தொகையை தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து தினேஷ் எடுத்துள்ளார்.

அவ்வளவு பணம் எதற்கு என தினேஷின் தந்தை கேட்டதும், உண்மையை தெரிவித்து உள்ளார். இதன்பின் அவர் என்னை போலீசில் புகார் அளிக்க அழைத்து சென்றார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் நம்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை வருகிற வெள்ளி கிழமை வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர். தப்பியோடிய மணீஷை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.80 லட்சம் பணம், பரிசு பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.