மோடியின் `ரோடு ஷோ’… தேர்தல் விதிகளை பிரதமரே மீறலாமா… கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

குஜராத் சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாக்களித்தனர். டிசம்பர் 5-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப் நிஷான் அரசுப் பள்ளியில் மோடி வாக்களித்தார்.

பிரதமர் மோடி

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ஜனநாயகத் திருவிழாவை குஜராத், இமாச்சலப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் ஆணையம் தேர்தலை அமைதியாக நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துகள்” என்றார்.

தேர்தல் ஆணையத்துக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சாலையில் ஒரு பேரணி போலச் சென்று அவர் வாக்களித்தது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க் கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. வாக்குப்பதிவு நடக்கும்போது, பொதுக்கூட்டம், பேரணி உள்பட எதற்கும் அனுமதி கிடையாது. அப்படியிருக்கும்போது, பிரதமர் மோடி பேரணியாகச் சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

சாலையில் நடந்துவந்த மோடி

இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கொந்தளித்திருக்கிறார். அவர், “வாக்கு பதிவு நடைபெறும்போது சாலையில் பேரணி செல்ல அனுமதி கிடையாது. ஆனால், பிரதமர் மோடியும் அவருடைய கட்சியினரும் வி.வி.ஐ.பி-கள். அவர்களால் எதையும் செய்ய முடியும். அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்” என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.

வாக்களிக்கச் செல்லும் வழியில் சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த வாக்காளர்களைப் பார்த்து பிரதமர் உற்சாகமாகக் கையசைக்கும் புகைப்படங்களும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. அடுத்த சில மணி நேரத்தில், மம்தாவிடமிருந்து விமர்சனம் வந்தது. பிரதமரின் அந்த நடவடிக்கையை விமர்சித்த மம்தா, தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வுசெய்யப்படும் முறை குறித்தும் கேள்வியெழுப்பினார்.

மக்களைப் பார்த்து கையசைத்த மோடி

காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் விமர்சனம் எழுந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலல் பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியபோதும், தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது என்று காங்கிரஸ் கூறியது. காங்கிரஸ் கட்சியின் ஐ.டி பிரிவுத் தலைவரான பவன் கெரா, “கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையம் செயலற்றுக் கிடக்கிறது. தேர்தலில் பிரதமர், சாமானியர் என யாராக இருந்தாலும் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும். ஆனால், பிரதமர் பேரணியாகச் சென்று வாக்களித்திருக்கிறார். அது குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

மேலும், “அகமதாபாத்தில் பிரதமர் வாக்களிக்கச் செல்வதை இரண்டரை மணி நேரமாக அனைத்து செய்தி சேனல்களும் இலவசமாக ஒளிபரப்பு செய்தன. எதற்காக இலவசமாக ஒளிபரப்பு செய்கிறீர்கள்? இத்தகைய விளம்பரம் தேர்தல் செலவுக்கணக்கின் கீழ் வருவதை உறுதிசெய்ய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்போம்” என்றார் கெரா.

மோடி

சாலையில் பேரணி போல பிரதமர் சென்றதை பா.ஜ.க-வினர் நியாயப்படுத்தியிருக்கிறார்கள். பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளரான டாம் வடக்கன், “வாக்குச்சாவடி அமைந்திருந்த இடத்துக்கு சற்று தள்ளி, பிரதமருடன் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பிரதமர் வாக்குச்சாவடிக்கு நடந்துசென்றார். எனவே, அது ‘ரோடு ஷோ‘ கிடையாது” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் புகாரை தேர்தல் அதிகாரியும் மறுத்திருக்கிறார். “வாக்குச்சாவடிக்கு பிரதமர் நடந்துசென்றது குறித்து காங்கிரஸ் கட்சி புகார் அளித்திருக்கிறது. அதை, ‘ரோடு ஷோ’ என்று குறிப்பிட முடியாது. ஏனென்றால், சாலையின் இருமருங்கிலும் மக்கள் தாங்களாகவே நின்றார்கள்” என்று கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.