யோகிபாபுவின் ‘ஷூ’ பட விநியோகஸ்தர் தரப்பினரை கடத்திய தயாரிப்பு தரப்பு? காணாமல் போன ஊழியர்!

நடிகர் யோகி பாபுவின் ‘ஷு’ படத்தின் விநியோகஸ்தர் தரப்பு ஆட்களை, தயாரிப்பாளர் தரப்பு ஆட்கள் கடத்திச் சென்று, அடித்து பணம் பறித்ததாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் மதுராஜ் (39). இவர், விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவென்யூ 2வது தெருவில் ஏ.டி.எம். என்ற பெயரில் சினிமா வினியோகம் செய்யும் நிறுவனத்தை கடந்த இரண்டு மாதங்களாக நடத்தி வருகின்றார். கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘ஷூ’ திரைப்படத்தின் விநியோகம் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் உரிமத்திற்காக, தயாரிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் ரூ. 1.10 கோடி ஒப்பந்தம் செய்து, அதில் ரூ. 17 லட்சம் முதல் தவணையாக மதுராஜ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மீதமுள்ள ரூ. 98 லட்சத்தை இரண்டு தவணை முறையில், மதுராஜ் கொடுத்துவிடுவதாக தெரிவித்த நிலையில், மனைவியின் பிரசவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி மதுராஜ் மதுரை மாவட்டத்திற்கு அவசரமாக சென்றதால் பணம் கொடுக்க காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி தயாரிப்பாளர் கார்த்திக், தனது அடியாட்கள் 10 பேருடன் சென்று, மதுராஜின் அலுவலகத்தில் புகுந்து ஊழியர்கள் கோபி மற்றும் பென்சர் ஆகிய இருவரையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.

image

பின்னர் தாம்பரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி, பின்னர் அவர்களின் செல்ஃபோன்களை பறித்து, ஏ.டி.எம் கார்டிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் கார்த்திக் மற்றும் அவரது அடியாட்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் காவல் நிலையத்திற்கு சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டி இருவரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அந்த கும்பல் சென்றதாகத் தெரிகிறது.

இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில், நேற்று மதுரையில் இருந்து வந்த மதுராஜ்-க்கு நடந்த விஷயம் தெரியவரவே, பாதிக்கப்பட்ட ஊழியர்களான கோபி மற்றும் பென்சரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அதில் பென்சர் மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக இதுகுறித்து மதுராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், அலுவலகத்திற்குள் புகுந்து கடத்தலில் ஈடுபட்ட வண்டலூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் நாகராஜ், வினோத் ராஜ், கல்லூரி மாணவர் சொக்கலிங்கம், ரவுடி பிரசாந்த் ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பென்சரின் செல்ஃபோன் எண்ணின் முகவரியை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.