சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுவடையும். இதன் காரணமாக சென்னை, கடலூர், டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 9-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வானிலை மைய தென் மண்டல தலைவருடன் தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிச.6-ம் தேதி (நேற்று) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 7-ம் தேதி (இன்று) மாலை புயலாக வலுவடையக்கூடும்.
இதன் காரணமாக 7-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8-ம் தேதி (நாளை) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
9-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
10-ம் தேதி வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னையில் 7-ம் தேதி (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வட இலங்கை கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில், டிச.7, 8, 9, 10-ல் அதிகபட்சம் 90 கி.மீ. வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதும் அதற்கு ‘மேன்டூஸ்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் பெயரிடப்படும்.
தலைமைச் செயலர் சந்திப்பு: அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்பு சந்தித்து, வரக்கூடிய புயல், காற்றின் வேகம், மழை அளவு, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.