ஈரானில் ஹிஜாப் ‘அறநெறி காவலர்’ பிரிவு கலைக்கப்பட்டதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் நம்ப மறுத்துள்ளன.
ஈரானில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி காவலர்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி காவலர் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு பணிந்துள்ளது. அந்த வகையில், ஈரானில் பொதுவெளியில் இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் உறுதிபடுத்தும் ‘அறநெறி காவலர்’ பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது.
ஆனால் அறநெறி காவலர் பிரிவு நிரந்தரமாக கலைக்கப்படதா? அல்லது இந்த நடவடிக்கை தற்காலிகமானதா? என்று அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அறநெறி காவலர் பிரிவு கலைப்பு ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு மேலாக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹிஜாப் ‘அறநெறி காவலர்’ பிரிவை ஈரான் கலைத்ததில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் மறுப்பு தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் ஈரான் அரசின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் நாங்கள் பார்க்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. “ஈரான் மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழ விரும்புகிறார்கள். அறநெறி காவல் துறையை கலைத்துள்ளீர்கள் என்றால், அதில் மீண்டும் மாற்றத்தை கொண்டுவராதீர்கள்” என்று ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in