பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடருக்காக பிரத்யேகமாக கத்தாரில் ஸ்டேடியம் 974 மைதானம் உருவாக்கப்பட்டது. காலிறுதிக்கு முன்னேறுவது யார் என்ற போட்டியில் மோதிய தென்கொரியா மற்றும் பிரேசில் அணிகள் இந்த மைதானத்தில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த மைதானம் 974 முற்றிலுமாக அகற்றப்பட இருக்கிறது.
உலக கோப்பைக்காக கட்டமைக்கப்பட்ட இந்த மைதானதை உருவாக்குவதற்காக பயன்படுத்தபட்ட கப்பல் கொள்கலன்களின் எண்ணிக்கையை கொண்டு மைதானத்துக்கு ஸ்டேடியம் 974 என பெயரிடப்பட்டது. இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 7 உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு இருக்கிறது. மைதானம் கட்டப்படும்போதே மறு சுழற்சிக்காக பயன்படுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டது.
974 மைதானம் கண்ணை கவரும் பல வண்ண கப்பல் கொள்கலன்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த கொள்கலன்கள் கழிவறைகளையும், உட்புற அமைப்புகளையும் கொண்டிருக்கும். உலக கோப்பைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பாகங்கள் எங்கு கொண்டு செல்லப்படும் என்ற தகவல் தெரியவில்லை. இந்த மைதானத்தில் நெய்மர், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் கோல்கள் அடித்துள்ளனர்.