பெங்களூரு: கர்நாடகா- மகாராஷ்டிரா இடையே எல்லையோர கிராமங்களை இணைப்பது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் நேற்று பெலகாவிக்கு வருவதாக தகவல் வெளியானதால் எல்லையோர பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் மகாராஷ்டிர பதிவெண் கொண்ட லாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைக் கண்டித்து நேற்று புனேயில் சிவசேனா அமைப்பினர் கர்நாடக அரசு பேருந்துகளுக்கு கருப்பு மை பூசினர். மேலும் கர்நாடக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவசேனா அமைப்பினர், கர்நாடகாவில் மகாராஷ்டிர வாகனங்கள் தாக்கப்பட்டால் கர்நாடக வாகனங்களை மகாராஷ்டிராவில் தாக்குவோம். கர்நாடகாவில் இருந்து வரும் ரயிலை கூட விட மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் பெலகாவியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.