’கோவில்கள் குறித்த கருத்தை பலமுறை கூறிவிட்டோம்’-திருச்செந்தூர் கோவில் வழக்கில் நீதிபதிகள்!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் சொத்துக்களை பராமரிப்பது பாதுகாப்பது போன்ற பொறுப்புகள் உள்ளன என்றும், அதன் வருவாயை சரியான செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான துவாதசி மடம் பகுதி, தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டு மீண்டும் கோவிலிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அறியக்கூடிய இடமாக கோயில்கள் உள்ளது என பலமுறை இந்த நீதிமன்றம் கூறியுள்ளது. கலை, அறிவியல் மற்றும் சிற்பத்துறைக்கு சாட்சியாகவும் கோயில்கள் உள்ளது.
மதரீதியான சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை பராமரிப்பதன் மூலம் வருவாய் பெற முடியும். அதன் மூலம் அந்த சொத்துக்களை பாதுகாக்க முடியும். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் சொத்துக்களை பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற பொறுப்புகள் உள்ளது. அதன் வருவாயை சரியான செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
image
இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அது அன்னதானம் வழங்கக்கூடிய இடமாக துவாதசி மடம் அன்னதான அறக்கட்டளை அபிவிருத்தி அறக்கட்டளை இடம் இருந்து, தற்போது தனி நபருக்கு விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்ததன்படி மனுதாரர் தெரிவித்துள்ள இடம் பதியப்படும்போது இரு வேறு தகவல்கள் உள்ளது. எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகம் ஆகியோர் இணைந்து மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.