ஜெயலலிதா நினைவு தினம்: இறப்பை உறுதி செய்ய வேண்டியது ஆணையமா, மருத்துமனையா? – நீடிக்கும் குழப்பம்..!

கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். அப்போது அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இது தொடர்பான முழு அறிக்கையும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வரிடம்  நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்தார். இதை அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவையில் 608 பக்க ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கியமான பல தகவல்கள் வெளியானது. குறிப்பாக, ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை கூறியது. ஆனால், அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4-ம்தேதி மதியம் 3-3.50 மணிக்கு இறந்திருப்பதாக அறிக்கைக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா நினைவு தினம்

2017-ம் தொடங்கி கடந்தாண்டு வரை  டிசம்பர் 5-ம் நாள் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆணையத்தின் முடிவுகள் வெளிவந்த பின்னரும்,  அ.தி.மு.க தரப்பில் நினைவு  தினத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதா நினைவு நாளில், அவருடைய நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஆறுமுகசாமி ஆணையம்

ஆனால், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.சி. பழனிசாமி ஆணையத்தின் முடிவுகளை ஏற்கும் வகையில் டிசம்பர் 4-ம் தேதியை நினைவு  நாளாக அனுசரித்தார்.மேலும் அதை உறுதி செய்ய தமிழக அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். இது தொடர்பாக அவரிடம் பேசியபோது, “மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ஆணையத்தை அமைத்த அ.தி.மு.க-வே அதைப் பின்பற்றாமல் இருப்பது சரியல்ல. அ.தி.மு.க-வில் இருந்து விலகிய பன்னீர்செல்வம், மரணத்தில் மர்மம் இருப்பதைக் கண்டுபிடிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைத்தே மீண்டும் கட்சியில் இணைந்தார்.

ஆனால் அவரும் ஆணையம் கூறுவதை ஒப்புக்கொள்ளவில்லை. நீதிமன்றத்துக்கு நிகரான ஆணையம் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வது அவர்கள் கடமை. அதை மறுக்கும் பட்சத்தில், ஆணையம் சொல்வது தவறு, நாங்கள் டிசம்பர் 5-ம் நாளை தான் நினைவு தினமாகக் கொண்டாடுவோம் என்பதை அறிவிக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கை இல்லாத ஆணையத்தை எதற்கு அமைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் 1.5 கோடி பேர் அ.தி.மு.க-வில் தொண்டர்களாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களை ஆட்டு மந்தைகள் போல் எண்ணி தாங்கள் சொல்வதற்கு தலையாட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை இல்லாத வார்த்தைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய, மாநில அரசு நினைவு தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து  அரசாணை வெளியிட கோரிக்கை வைத்திருக்கிறோம். அப்படி வெளியிடாத நிலையில் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம் ” என்றார்.

கே.சி.பழனிச்சாமி

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசிய அதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன், “மருத்துவமனை அறிவித்த முந்தைய நாளே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததாக சாட்சிகள் வாயிலாக தெரிய வருகிறது. ஆனால், ஆணையத்தின் தீர்ப்பைவிட மருத்துவ அறிக்கைதான் முக்கியம். அரசு சார்பாக டிசம்பர் 5-ம் நாள் மரணமடைந்ததாக அரசாணை வெளியிடப்பட்டது. அதை 5 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்தோம். இதை மீண்டும் மாற்றம் செய்வது என்பது இயலாது. ஆறுமுகசாமி ஆணையம் சாட்சிகளைக் கொண்டு விசாரித்து வெளியிட்ட முடிவை ஒப்புக்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை தாங்கள் தவறான அறிக்கை வெளியிட்டோம் என்று சொல்லவில்லை. ஆகவே, நாங்கள் ஆணையத்தின் தீர்ப்பை ஏற்கிறோம், ஏற்கவில்லை என்பது பொருளல்ல. ஒருவர் பிறப்பு, இறப்பு மருத்துவ அறிக்கையால் தான் தீர்மானிக்க முடியும். எனவே அதன் அடிப்படையில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

வைகைச்செல்வன்

ஆணையத்தின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியை வழக்கறிஞர் சேகர் அண்ணாதுரையிடம் முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்த அவர்,“ஒரு ஆணையத்தின் அதிகாரம் என்பது பரிந்துரைகள் வழங்குவது மட்டுமே. அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து விசாரணைக்கு உட்படுத்திய பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். ஆகவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டு, அரசு சார்பாக அரசாணை  வெளியிட்டால் மட்டுமே இதில் மாற்றம் ஏற்படும். ஆகவே, தற்போது வரை மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தகவலை மட்டுமே ஏற்க முடியும்” என்றார்.

சேகர் அண்ணாதுரை,வழக்கறிஞர்

பல இடங்களிலிலிருந்து வந்த மக்கள் ஜெயலலிதா சமாதியில் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பான குழப்பங்களுக்கு விடை கிடைக்குமா? என்பதே ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டர்களின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.