காசி தமிழ் சங்கமம் ஆன்மிகத்திற்கானது மட்டுமல்ல, பாஜகவின் அரசியலுக்குமானது என கூறி இருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். அரசு பணத்தில் கட்சி அரசியல் செய்வது சரியா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்திருக்கிறார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு நேர்காணல்:
திமுகவின் ஒன்றரை ஆண்டு கால ஆட்சி எவ்வாறு இருக்கிறது?
இந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சி அனைத்து வகையிலும் மக்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது. லஞ்சம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு என அனைத்துத் தரப்பு மக்களையும் இந்த அரசு பாதிப்படையச் செய்கிறது. லஞ்சம், ஊழல் ஆகியவற்றைத் தாண்டி திமுக ஆட்சியில் பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் வளர்ந்து வருகிறது. பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் பாதுகாக்கப்படுகிறார்கள். எனவே, மத்திய அரசு, தமிழக அரசை வெகு சீக்கிரத்தில் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய வேலையை செய்ய வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து இயக்கங்கள் தீவிர எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்திருப்பதாகக் கொள்ளலாமா?
ஒருபக்கம் சேகர்பாபு, துர்கா ஸ்டாலின் ஆகியோர் கோயிலுக்குப் போவதும், மற்றொரு பக்கம் இந்து விரோதிகளுக்கு, இந்து சமயத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்களுக்கு தங்கள் அரசில் இடம் கொடுப்பதுமாக நாடக அரசியல் நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு மீது குற்றம்சாட்ட வேறு ஏதும் இல்லாததால் மதத்தை வைத்து சிலர் அரசுக்கு எதிராக அரசியல் செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
தமிழக அரசின் மீது குற்றம் சுமத்துவதற்கு ஏராளமாக இருக்கிறது. சொத்து வரி உயர்ந்துவிட்டது. மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நாங்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழக அரசு தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவாக இருப்பதாகக் குற்றம்சாட்டுவது திட்டமிட்ட பொய் பிரச்சாரம் என திமுக தரப்பில் கூறப்படுவது பற்றி…
கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயிலை தகர்க்கின்ற எண்ணத்தோடு வந்தவன் ஜமிஷா முபின். ஆனால், அதை சிலிண்டர் விபத்து, கார் விபத்து என கூறினார்கள். வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க ஒரு வார கால அவகாசம் ஏன் எடுத்துக்கொண்டார்கள். இது குறித்து ஆளுநரும் கேள்வி எழுப்பி இருந்தாரே.
கர்நாடகாவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கும் ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது…
கர்நாடக அரசு எந்த இடத்திலும் இந்தியாவை ஒன்றியம் என சொல்லவில்லை. ஆனால், இங்கே சொல்கிறார்கள். இவர் என்ன தனி ராஜாவா? இது என்ன தனி நாடா? அவருக்கு திராவிட பேரரசர் என நினைப்பு. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படாதீர்கள் என முதல்வர் ஸ்டாலினை பலமுறை நான் எச்சரித்திருக்கிறேன். சிறுபான்மையினரை ஆதரிப்பது என்பது வேறு; பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது வேறு. அரசியல் சாசன பிரிவு 360 ரத்து செய்தபோது இவர்கள் ஏன் போராட வேண்டும்? யாரோடு உங்களுக்கு உறவு? உங்கள் நடத்தையிலேயே தெரிகிறதே – நீங்கள் எப்படி என்பது. எனவே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஸ்டாலின் இனிமேலாவது திருந்த வேண்டும். பிரதமரை வைத்துக்கொண்டே ஒன்றியம் என பேசுவதா? ஒன்றியம் என இந்தியாவை குறிப்பிடுவது பிரிவினைவாதம்.
காசி தமிழ் சங்கமம் ஆன்மிகத்திற்கானதா? அல்லது பாஜகவின் அரசியலுக்கானதா?
காசி தமிழ் சங்கமம் ஆன்மிகத்திற்கானது. பாஜகவின் அரசியலுக்கானது. இந்துக்களின் விழிப்புணர்வுக்கானது. தமிழர்களின் எழுச்சிக்கானது.
இது அரசு நடத்தும் நிகழ்ச்சி. இது பாஜகவின் அரசியலுக்கானது என கூறுவது சரியா?
இது ஒன்றும் தவறில்லை. ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவோம் என்று பொய்யைச் சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது திமுக.
திமுக தவறு செய்வதால் பாஜகவும் தவறு செய்யலாம் என கூறுகிறீர்களா? இது சரியான வாதமா?
பாஜகவின் அரசியல் ஆன்மிக அரசியல். எனவே அதைச் செய்கிறார்கள்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும், இல்லையென்றால் அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாகவும் கூறி இருக்கிறார். அவரது இந்த கடிதத்தை தமிழக அரசு, குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்கள்? எவ்வாறு எடுத்துக்கொள்வார் என கருதுகிறீர்கள்?
அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது கடந்த 40 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் போராட்டம். தேவாலய சொத்துக்கள் கிறிஸ்தவர்கள் கைகளில் உள்ளது. மசூதி சொத்துக்கள் இஸ்லாமியர்களின் கைகளில் உள்ளது. கோயில் சொத்துக்கள் மட்டும் மதச்சார்பற்ற அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. இது இந்துக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி. ஆலயங்கள் பக்தர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆலயத்தை நிர்வாகம் செய்பவர்கள் அந்த ஆலயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். எனவே, இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, ஆலயங்களை நிர்வாகம் செய்ய தனி வாரியம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் அவை நிர்வாகம் செய்யப்பட வேண்டும். இது எங்கள் நீண்ட கால கோரிக்கை. இதை வலியுறுத்தி சுப்ரமணியன் சுவாமி முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
அறநிலையத் துறை என்பது ஆன்மிகம் சார்ந்தது. அரசியல்வாதிகளுக்கு ஆலயத்தில் வேலை கிடையாது. ஆன்மிகவாதிகளுக்குத்தான் அங்கு வேலை. எப்போது தேர் ஓட வேண்டும், எப்போது கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அரசியல்வாதிகள் முடிவெடுக்கக் கூடாது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசுவதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டுகிறது. அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளது. ஆளுநரின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆளுநருக்கு எதிராக பேசுவதும், பிறகு ஆளுநரைச் சந்தித்து மனு கொடுப்பதும் திமுகவின் வாடிக்கை. ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே அவரை திமுக எதிர்க்கிறது. ஆனால், அவர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுத்தான் தனது வேலையை செய்து வருகிறார். அதை மீறி அவர் செயல்படவே இல்லை.
இந்துத்துவ அரசியலின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? இது தமிழ்நாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
திராவிட அரசியலுக்கு மாற்று இன்னொரு திராவிடம் அல்ல. திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல. திராவிட அரசியலுக்கு மாற்று கம்யூனிஸ்டுகளோ, காங்கிரசோ அல்ல. திராவிட அரசியலுக்கு மாற்று இந்துத்துவ அரசியல்தான். இந்த இந்துத்துவ அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. தமிழகம் இந்துத்துவ பூமி; தமிழகம் சங்கிகளின் பூமி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமி. ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் பூமி இது. எனவே, இங்கு நாங்கள் வளர்வதை யாரும் தடுக்க முடியாது.
இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள். இதன் நோக்கம் என்ன?
தமிழகத்தில் இந்து சமுதாயத்திற்காக குரல் கொடுக்கக்கூடியவர்களுக்கு, இந்து தர்மத்திற்காக எழுதுபவர்களுக்கு, பேசுபவர்களுக்கு, இந்த கருத்துக்களை திரைப்படங்களில் இடம் பெறச் செய்பவர்களுக்கு நாங்கள் இந்து ரத்னா எனும் விருதை கொடுக்கின்றோம்.
இந்துத்துவ கருத்துக்களுக்கு ஆதரவாக திரைப்படங்கள் சமீப காலமாக வெளிவருவதையும், அவை வெற்றி பெறுவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
இது காலத்தின் தேவை. ஒரு காலத்தில், ‘அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்’ என வசனம் எழுதியவர் கருணாநிதி. திராவிடக் கருத்துக்களோடு பல படங்கள் வெளிவந்தன. அப்போதும்கூட தேசியத்திற்கும் தெய்வீகத்திற்கும் ஆதரவாக திருவருட்செல்வர் உள்பட பல படங்கள் வந்துள்ளன. ஆனால், இப்போது ஒரு கருத்து பயங்கரவாதம் திரைப்பட உலகை கைப்பற்றி வைத்திருக்கிறது. நகர்ப்புற நக்ஸல்கள் அதிகம்பேர் திரைப்படத்துறையில் ஊடுருவி இருக்கிறார்கள். பிரபலங்கள் என்ற பெயரில் இந்தியா குறித்தும், இந்து மதம் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டாமா? இத்தகைய படங்கள் மூலம் இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திராவிட இயக்கம் வீழ்த்தப்படும்.
தமிழகத்தில் ஒருபக்கம் இந்து இயக்கங்களின் வளர்ச்சி, மறுபக்கம் பெரியார் ஈவெரா ஆதரவாளர்களின் எண்ணிக்கை உயர்வு. இதை எப்படி பார்க்கிறீர்கள்? தமிழ்நாடு அனைவருக்குமான பூமி என எடுத்துக்கொள்ளலாமா?
இந்துத்துவம் என்பதே அனைவரையும் உள்ளடக்கியதுதான். இந்துவாக இருந்துகொண்டே நாத்திகராக, சோசலிஸ்டாக, கம்யூனிஸ்டாக, முஸ்லிமாக இருக்க முடியும். வழிபாட்டிலோ, சித்தாந்தத்திலோ நாம் வேறுபாடு பார்ப்பதில்லை. இந்து என்பது ஒரு மதமல்ல. அது ஒரு கலாச்சார தேசியம். இதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. நாங்களும் அதை மதவாதமாகப் பார்க்கவில்லை. இந்து மதத்தில் நாத்திகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களைப் போல் அல்ல. இவர்கள் மதமாற்றம் செய்பவர்களுக்கு ஆதரவாக, பணம் தருபவர்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடியவர்கள். ஈவெரா ஆதரவாளர்கள் யாராவது இஸ்லாமியர்கள் குறித்து பேசுகிறார்களா? ஹிஜாப்புக்கு எதிராக ஈரானில் மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. ஆனால், பெண் விடுதலைக்காக பேசுகிறோம் என கூறும் இங்கிருக்கும் சல்மாவும், கனிமொழியும் எங்கே போனார்கள்? ஏன் குரல் கொடுக்கவில்லை. எனவே, இவர்கள் பேசுவது உண்மையான நாத்திகம் கிடையாது.
இந்துக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாமதிக்காமல் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றும், இவ்விஷயத்தில் இஸ்லாமிய சமூகத்தை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்திருக்கிறார். அதாவது ஆண்களுக்கு 20-22 வயதுக்குள்ளும், பெண்களுக்கு 18-20 வயதுக்குள் திருணம் செய்துவிட வேண்டும் என கூறி இருக்கிறார். அவரது இந்த கருத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பால்ய விவகாம், உடன் கட்டை ஏறுதல் ஆகியவை ஒரு காலத்தில் இருந்தது. நாங்கள் விஞ்ஞானப்பூர்வமானவர்கள். பகுத்தறிவோடு சிந்திக்கக்கூடியவர்கள். காலத்திற்கு ஏற்றபடி நாங்கள் எங்களை சீர்திருத்திக் கொண்டு, மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு பயணித்து வருகிறோம். எனவே, அவரது கருத்து எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என கருதுகிறீர்கள்?
குஜராத் மாடல் என்பது மற்ற மாநிலங்களுக்குச் சவால் அல்ல. வளர்ந்த நாடுகளுக்கே சவால் விடுவது. விவசாயம், குடிநீர், மருத்துவம், தொழில் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி ஒரு பொற்கால ஆட்சியைக் கொடுத்து, அதன்மூலம் வலிமையான ஒரு அடித்தளத்தை குஜராத்தில் ஏற்படுத்தியவர் நரேந்திர மோடி. அவர் குஜராத்தின் கமாராஜர். குஜராத்தில் 13 ஆண்டு காலம் முதல்வராக இருந்த பிறகுதான் நாட்டின் பிரதமராக வெற்றி பெற்றார் அவர். தற்போது நாட்டை உலக அரங்கில் உயர்த்திக்கொண்டிருக்கிறார். எனவே, குஜராத்தில் பாஜகதான் வெற்றி பெறும். இமாச்சலிலும் பாஜகதான் வெற்றி பெறும்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தமிழகத்தில் எவ்வாறு இருக்கும் என கணிக்கலாம்?
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு நல்ல வேட்பாளர் காங்கிரஸ் கட்சியிலோ அல்லது பிற கட்சிகளிலோ கிடையாது. எனவே, 3-வது முறையாகவும் பாரத பிரதமராக மோடிதான் வருவார். இன்னும் கூடுதல் பலத்துடன் அவர் பொறுப்பேற்க இருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. நரேந்திர மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர்கள்தான் தமிழகத்திலும் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் 40 தொகுதிகளிலும் அதிமுக – பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும்.
வீடியோ வடிவில் > இந்துத்துவ அரசியல் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது: அர்ஜூன் சம்பத்