வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது
புயல் கரையை கடக்கும்போது புதுவையிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.