புயல் எச்சரிக்கை: தஞ்சாவூரில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண்கள் அறிவிப்பு

தஞ்சாவூர்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எதிரொலியாக நாளை (8-ம் தேதி), 9-ம் மற்றும் 10-ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகப்பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் கொண்ட 10 குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு எஸ்.ஐ., அலோக் குமார் சுக்லா, டி.வி.பாட்டீல் ஆகியோரது தலைமையிலான 25 பேர் அடங்கிய குழுவினர் வெள்ள தடுப்பு மீட்பு உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்களுடன் நேற்று காலை வந்தனர். அவர்களிடம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எடுத்துரைத்து, ஆலோசனைகளை வழங்கி தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்ட சேதுபாவாசத்திரம்,மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் சுமார் 150 விசைப்படகுகள், 32 மீனவர் கிராமங்களில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய், உள்ளாட்சி, சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய அனைத்து துறையினரின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்துக் கூறியது: “தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பலநோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள், 143 கனரக இயந்திரங்கள், 617 அறுவை இயந்திரங்கள், 99 மரம் வெட்டும் இயந்திரங்கள், 113 ஜெனரேட்டர்கள், 37 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள், 1,17,325 மணல் மூட்டைகள், 30,672 தடுப்பு கம்புகள், 4,500 முதல் நிலை பணியாளர்கள் மற்றும் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் 200 முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளன.

பதாதைகள், போர்டுகள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும், கோட்ட, வட்ட அளவிலான கூட்டங்கள் நடத்தி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் (04362-264115, 264117, அலைபேசி எண். 9345336838) அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்” எனத் தெரிவித்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.