அண்ணாமலைக்கு புதிய பவர்.. நிர்வாகிகள் கலக்கம்; பாகம்-1

தமிழ்நாடு பாஜகவின் ஓபிசி பிரிவு பொதுச்செயளார் சூர்யா சிவா மற்றும் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண் ஆகியோர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பாஜகவில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத்தலைவர் காயத்ரி ரகுராம், ‘சொந்த கட்சியின் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? டெய்சிக்கு என்னுடைய ஆறுதல் மற்றும் ஆதரவு’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக காயத்ரி ரகுராம் ஈடுபட்டு வருவதாக கூறி 6 மாத காலம் அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் சூர்யா சிவா, டெய்சி சரண் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதன் பிறகு சமாதானமாக செல்வதாக இருவருமே ஒன்றாக பேட்டி அளித்து இருந்தனர்.

ஆனாலும் அந்த ஆடியோவில் அவதூறாக பேசி இருப்பதை சுட்டிக்காட்டி சூர்யா சிவாவை 6 மாத காலத்துக்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில் பாஜகவில் இருந்து தான் விலகுவதாக சூர்யா சிவா திடீரென அறிவித்தார். இது தொடர்பாக சூர்யா சிவா தனது டிவிட்டர் பதிவில் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி.

வருகிற தேர்தலில் பாஜக இரட்டை இலக்கம் அடையும். அதை அடைய வேண்டும் என்றால் பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளராக உள்ள கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும்.

இல்லையென்றால், கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்களின் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி என, கூறி இருந்தார்.

இந்த விவகாரம் பாஜக வட்டாரத்தை கடும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, சமூக வலைதளவாசிகளுக்கும் தீனியாக அமைந்து போனது. சூர்யா சிவா தனது பங்குக்கு இப்படியெல்லாம் கொளுத்தி போட்டு சென்றுள்ளார்.

மறு புறம், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் இன்னமும் சமூக வலைதளங்களில் பாஜக கட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

டெய்சி சரண் மற்றும் அவரது மகளும் தங்களது பங்குக்கு யூடியூப் சேனல்களில் இந்த விவகாரங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். இது போன்ற விவகாரங்களால் பாஜகவின் இமேஜ் வெகுவாக டேமேஜ் ஆகி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி சென்றார். தமிழ்நாடு பாஜகவில் அசாதாரண சூழல் நிலவுவதாலேயே அதுகுறித்து விசாரிக்க அண்ணாமலை அழைக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது.

ஆனால் உண்மையில் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் டெல்லியில் நடந்த பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் சென்றது தெரிய வந்துள்ளது.

இந்த கூட்டத்தில் அண்ணாமலை, வானதி சீனிவாசனிடம் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் சூழல் குறித்து ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் தமிழக பாஜகவில் அரங்கேறும் அடுத்தடுத்த சம்பவங்கள் குறித்து அண்ணாமலை விபரமாக விளக்கி கூறியுள்ளார். இதை கேட்ட பாஜக தலைமை ‘கட்சி வளர்ச்சிக்காக எந்த முடிவு எடுத்தாலும் பரவாயில்லை.

உங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தி அண்ணாமலையை அனுப்பி உள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக கட்சியில் அதிரடி நடவடிக்கை எடுக்க அண்னாமலை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைவிடவும் இன்னும் பரபரப்பு தகவல் அடங்கிய செய்தி பாகம்-2ன் லிங்க் இது தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.