புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச வெற்றி, அடுத்து வரக்கூடிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3.30 மணி நிலவரம்: இமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், அருதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 35 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் நிலையில் அக்கட்சி உள்ளது. பாஜக 13 இடங்களில் வெற்றி; 13 இடங்களில் முன்னிலை என 26 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனந்த் ஷர்மா பேட்டி: தேர்தல் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் ஷர்மா, “இமாச்சலப் பிரதேச தேர்தல் வெற்றி அடுத்து வரக் கூடிய ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளது. அந்தச் செய்தியைத்தான் இந்த முடிவுகள் கொடுக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, காங்கிரஸ் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தோம். இதே கோரிக்கையை பிற மாநில அரசு ஊழியர்களும் வலியுறுத்தி வருகின்றனர்” என தெரிவித்தார்.
முதல்வர் ஜெய்ராம் தாகூர் ராஜினாமா: இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜக இழந்ததை அடுத்து, ராஜினாமா கடிதத்தை விரைவில் ஆளுநரிடம் வழங்க இருப்பதாக முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜெய்ராம் தாகூர், பிரதமருக்கும் பாஜகவின் பிற தேசிய தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். அரசியலைக் கடந்து இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என தெரிவித்துள்ள அவர், தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வோம் என்றும் மேம்படுத்திக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். | இமாச்சல் நிலவரம் > இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் |