புதுடெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீப்புக்காக உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலஙகுகள் நல ஆர்வலர்கள தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 7-வது நாளாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “ஜல்லிக்கட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. அதேபோல, காளைகளுக்கும் உடல்நீதியாக கடுமையான தாக்கங்களை விளைவிக்கிறது. காளைகள் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை, அவை கட்டாயப்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கடந்த 5 ஆண்டுகளாக கள ஆய்வு செய்து சேகரித்து கொடுத்துள்ள தரவுகள், ஆதாரங்கள், அறிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஜல்லுக்கட்டு என்பது ஒரு கொடூரமான விளையாட்டு” என்று வாதிட்டார்.
அப்பது நீதிபதிகள், “இந்த விளையாட்டில் ஆயுதங்களை எவரும் பயன்படுத்தவில்லை. காளைகளை கொல்லவில்லை. அப்படியிருக்கும்போது, இதை எப்படி கொடூர விளையாட்டு எனக் கூறுவீர்கள்? ஸ்பெயினில் நடக்கும் எருது சண்டையில் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்துவர், ஆனால் இங்கு அப்படி இல்லையே? இங்கு மனிதர்கள் வெறும் கையுடன் தானே காளையை அடக்க முற்படுகின்றனர். எனவே இது எப்படி கொடூர விளையாட்டு என்பதை தெளிவுபடுத்துங்கள்” என்றனர்.
அதற்கு பீட்டா அமைப்பு தரப்பில், “எந்தெந்த விளையாட்டுகள் உயிர் பலியை ஏற்படுத்துகுறதோ, அவற்றை கொடூரமான விளையாட்டுக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், “ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்படுகிறது என்பதற்காக அதனை கொடூரமான விளையாட்டு என கூற முடியாது. ஜல்லிக்கட்டில் காளைய அடக்க முற்படுகிறவர்கள் வெறும் கையுடனே செல்கின்றனர். மேலும், அந்த காளையை கொல்லவும் இல்லை. அதேவேளையில் உயிர் பலி, ரத்த காயம் என்பது ஒரு எதிர்பாராத சம்பவம் மட்டுமே. மலையேற்றம் என்பதும் மிக ஆபத்தானது தான். எனவே அதனை தடை செய்யலாமா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பீட்டா அமைப்பு தரப்பில், “மலையேறுவது ஆபத்தான விளையாட்டு அல்லது செயல். இதில் எந்தக் கொடூரமும் நடத்தப்படவில்லை. ஏனெனில் மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களின் விருப்பத்தின்படிதான் செயல்படுகின்றனார். ஆனால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் விருப்பத்துடன்தான் அதில் ஈடுபடுகிறதா? நிச்சயமாக இல்லை. அவற்றுக்கு அதன் உரிமையை வெளிப்படுத்த தெரியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் என அனைத்து தரப்பும் இரண்டு வாரத்தில் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதோடு, ஜல்லிக்கட்டு வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.