கல்லணையை பாரம்பரிய சின்னமாக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை

புதுடெல்லி: கல்லணையை பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில்,“தமிழகத்தில் உள்ள கல்லணை  2000 ஆண்டுகள் பழமையானது. அதனை  உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்,’’ என வலியுறுத்தினார்.  அப்போது அமைச்சர் மீனாட்சி லேக்கி, “உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால்  பரிசீலிக்கப்படும்,’’ என தெரிவித்தார். பின்னர் குறுக்கிட்ட நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், “கல்லணை மிகப் பழமையானது தான். அதனை பராமரிக்க நிதி  உதவி வழங்கவும் அரசு தயாராக இருக்கிறது,’’ என தெரிவித்தார். மகளிர்  மசோதா: மக்களவையில் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது, “ மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இனியும் காலம் தாழ்த்தாமல், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தி, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி:  மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா,‘‘தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எந்த நிதியும் வழங்கப்படவில்லை,’’ என தெரிவித்தார். இப்கோ நிறுவனம்:   உர உற்பத்தி நிறுவனமான இப்கோவை கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்திற்கு மாற்ற வேண்டும் என்று திமுக எம்பி ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் கோரினார். ஆன்லைன் விளையாட்டு: மக்களவையில்  ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ,ஆன்லைன் சூதாட்டத்தை தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக கவர்னரை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கரீப் ரத், ஜன் சதாப்தி  குறைவா?  தமிழ்நாட்டில் கரீப் ரத் மற்றும் ஜன் சதாப்தி ரயில் சேவைகள் மிகவும் குறைவாக உள்ளது உண்மையா என்று மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ இந்திய ரயில்வே மாநில வாரியாக ரயில் சேவைகளை இயக்குவதில்லை. தமிழகத்தில் இரண்டு ஜோடி கரீப் ரத் எக்ஸ்பிரஸ் மற்றும் நான்கு ஜோடி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவைகளை இயக்குகிறது,’’ என தெரிவித்தார். முதியவர்கள் நலன்:   வன்முறை மற்றும் குற்றச் செயல்களால் நாட்டிலுள்ள முதியவர்கள் பெரும்பகுதியினர் பாதிக்கப்படுகிறார்களா, அப்படியானால் அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.