நடந்து முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இதில், குஜராத் மாநிலத் தேர்தலில் பா.ஜ.க 156 இடங்களைக் கைப்பற்றி, தொடர்ந்து 7-வது முறையாக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. மூன்றாவது அணியாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களைக் கைப்பற்றி தனது வெற்றிக் கணக்கை குஜராத்தில் தொடங்கியிருக்கிறது.

அதற்கு நேர்மாறாக, இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றிருக்கிறது. 25 இடங்களில் மட்டுமே வென்றிருக்கும் பா.ஜ.க தனது ஆட்சியை இழந்திருக்கிறது. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடங்களில்கூட வெற்றிபெறவில்லை.
பரபரப்பாக வெளியாகியிருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் என்னமாதிரியானக் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

பிரதமர் மோடி:
குஜராத் வெற்றிகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத்துக்கு நன்றி. இப்படிப்பட்ட அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்தனர், அதே நேரத்தில் இந்த வேகம் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தனர். எனவே குஜராத்தின் மக்கள் சக்திக்கு நான் தலைவணங்குகிறேன்!” எனப் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்திருக்கிறார். மேலும், “கடுமையாக உழைத்த குஜராத் பா.ஜ.க தொண்டர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன்! நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் நமது தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகியிருக்காது!” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. ஒரு தொகுதியில்கூட மறுவாக்குப்பதிவு நடத்தும் சூழல் ஏற்படவில்லை! குஜராத், இமாச்சல் மக்களுக்கு நன்றி! மாநிலத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும், இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்!” எனக் கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தி:
தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். இமாச்சலப் பிரதேசத் தேர்தல் வெற்றி குறித்து பதிவிட்டிருக்கும் அவர் “இந்த தீர்க்கமான வெற்றியைத் தந்த இமாச்சலப் பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது. இமாச்சல் மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என மீண்டும் உறுதியளிக்கிறேன்!” என்றிருக்கிறார்.

அதேபோல, குஜராத் தேர்தல் தோல்வி தொடர்பாக ராகுல் காந்தி, “குஜராத் மக்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டின் லட்சியங்களுக்காகவும், மாநில மக்களின் உரிமைகளுக்காகவும் நாம் மறுசீரமைத்து, கடுமையாக உழைத்து, தொடர்ந்து போராடுவோம்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால்:
ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், காணொளி வாயிலாக தனது கருத்துகளைப் பகிரிந்திருக்கிறார். அதில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியக் கட்சியாக மாறியிருக்கிறது. டெல்லி, பஞ்சாப் என 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. ஒரு கட்சி தேசிய கட்சியாக இருக்கவேண்டுமெனில், குறைந்தது 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். இப்போது இரண்டு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில், குஜராத் தேர்தலால் நம்முடையக் கட்சி தேசியக் கட்சியாக உயர்ந்திருக்கிறது.

இதற்கு கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைத்ததுதான் காரணம். குஜராத் மக்களுக்கு நன்றி. குஜராத் மக்கள்தான் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறக்காரணம். பா.ஜ.க-வின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் நாங்கள் 13% வாக்குகளைப் பெற்றிருப்பதன் மூலம் அந்தக் கோட்டைக்குள் நுழைந்திருக்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த குஜராத் மக்களுக்கு மிக்க நன்றி!” எனத் தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா:
பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தேர்தல் முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்திய மோடி தலைமையிலான பா.ஜ.க-வுக்கு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் பேராதரவு வழங்கியிருக்கின்றனர். இந்த வெற்றியானது, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களும் பா.ஜ.க மீது முழுநம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. `மோடி மாடல்’ மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியாகத் திகழ்கிறது. குஜராத் எப்போதும் வரலாறு படைக்கும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.