தஞ்சாவூர் : திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் என கோட்டாட்சியர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை (டிச.8) திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவையாறு வட்டாட்சியர் பழனியப்பன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சக்திவேல், நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆர்.அனிதா, திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் க.ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயி திருப்பூந்துருத்தி பி.சுகுமாரன் பேசியது: “திருவையாறு புறவழிச்சாலைத் திட்டத்துக்காக சுமார் 300 ஏக்கர் விளைநிலம் எடுக்கப்படுவதால், நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களது அனுமதி இல்லாமல், எங்களிடம் ஒப்புதல் பெறாமல் எங்களது இடத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிரை அழித்து சாலை அமைத்து வருகின்றனர். விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றனர். அமைதியாக போராட்டம் நடத்திய எங்களை காவல்த்துறையை வைத்து மிரட்டுகின்றனர்.
டிச.7-ம் தேதி நாளிதழ் ஒன்றில் விவசாயிகளை மிரட்டும் வகையில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை எந்த துறையினர் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. 2022 அக்.21 ம் தேதிக்கு பிறகு நெடுஞ்சாலைத் துறையிடம் நிலம் வந்துவிட்டதால், அந்தப் பகுதியில் சாலை அமைக்க யாரும் ஆட்சேபனை தெரிவிக்க கூடாது என விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் சம்பா சாகுபடியை செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்டோம். அந்த இடத்தின் பெயரில் வங்கியில் பயிர் கடன் வாங்கியுள்ளோம், பயிர் காப்பீடு செலுத்தியுள்ளோம். தற்போது வரை அந்த இடங்கள் விவசாயிகள் பெயரிலேயே உள்ளது, இதற்கான கணினி சிட்டாவும் எங்களிடம் உள்ளது.
மேலும், சாலை அமைப்பதாக கூறப்படும் இடங்களில் 6 போர்வெல் மோட்டார்கள் விவசாய பயன்பாட்டில் உள்ளது. இந்த மின்மோட்டார்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய இதுவரை எந்த தகவலும் இல்லை. அதே போல் வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் தொடர்பாக இதுவரை எந்த கணக்கீடும் நடத்தவில்லை. எனவே, விவசாய நிலங்களை நாங்கள் புறவழிச்சாலை அமைக்க தரமாட்டோம். எங்களது அனுமதி இல்லாமல் எங்களது நிலத்தை கையகப்படுத்தக்கூடாது” என்றார்.
அதேபோல் பெரும்புலியூர் வெங்கடேசன் கூறுகையில், ”எனக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்தை எனது அனுமதி இல்லாமல் கையகப்படுத்தியுள்ளனர். இதனால் வாழ வழியில்லை. எனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சக்திவேல் கூறுகையில், “சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அரசானை அறிவிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தி எங்களிடம் வழங்கிய பின்னர் தான் நாங்கள் பணியை தொடங்கியுள்ளோம்” என்றார்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் பேசும்போது, “திருவையாறு புறவழிச்சாலையை அமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. வருவாய்த் துறையினர் சட்டப்படியே நிலத்தை எடுத்துள்ளனர். போதிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும். அங்கு சாலை அமைக்கப்படுவது உறுதி, இது தொடர்பாக தீர்வு காண வேண்டும் என்றால் விவசாயிகள் நீதிமன்றத்தை நாடலாம்.
நெற்பயிர் அறுவடை செய்யும் பிப்ரவரி வரை அங்கு சாலை அமைக்க கூடாது, வாழை, தென்னை போன்ற மரங்கள் குறித்த கணக்கெடுப்பை உடனடியாக வருவாய்த்துறையினர் தொடங்க வேண்டும். அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும். இழப்பீடு போதவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம்” என்றார்.
பின்னர் விவசாயிகள் புறவழிச்சாலைக்கு நிலத்த தர விருப்பம் இல்லை என கோட்டாச்சியர் மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளின் கோரிக்கை மனுவை வழங்குவதாக கூறி மனுவை கோட்டாட்சியரிடம் அளித்தனர். கூட்டம் நடைபெற்றால் வழக்கமாக பங்கேற்றவர்களின் கையெழுத்துகள் பெறப்படும். அதற்கான படிவம் இருந்தும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் யாரும் கையெழுத்து போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.