தென்காசி/சென்னை: தென்காசியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா இன்றுகாலை 9.50 மணிக்கு தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ்வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் 1.03 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 182.52கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
ரயிலில் பயணம்: தென்காசிக்கு, பொதிகை விரைவு ரயிலில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 8.40 மணிக்கு புறப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன் முறையாக தற்போது தான் ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். பொதிகை விரைவு ரயிலில் அவருக்கு சொகுசு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பெட்டியை சலூன் பெட்டி என்று அழைப்பார்கள். இந்த பெட்டியில் குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர், முதல்வர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் செல்வதற்காக சலூன் என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப் பெட்டியை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இந்த சலூன் பெட்டி என்பது “நகரும் வீடு” போன்றது. குளியலறை வசதிகளுடன் கூடிய 2 படுக்கை அறை, பெரிய ஹால், சாப்பாட்டு அறை, சோபா, சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த சொகுசு வசதி பெட்டிக்கான கட்டணம் ரூ.2 லட்சம் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.