“ஹலோ ஸ்டாலின்… ஹவ் ஆர் யூ" – கலகலத்த டெல்லி ஜி20 ஆலோசனைக் கூட்டம்!

ஜி 20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது இந்தியா. அடுத்தாண்டு செப்டம்பரில் ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதுதொடர்பான முன்னேற்பாடுகள் இப்போதிருந்தே வேகமெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. உச்சி மாநாடுக்கு முன்பாக, பொருளாதாரம், சுகாதாரம், கலாசாரம், மொழி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் சுமார் 200 கூட்டங்களை நடத்தவும் ஏற்பாடாகிறது. ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பதால், இந்தக் கூட்டங்களையும் உச்சி மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்திட தீர்மானித்திருக்கிறார் பிரதமர் மோடி.

இதற்காக, நாடு முழுவதுமுள்ள 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தியிருக்கிறார். டிசம்பர் 5-ம் தேதி, டெல்லியுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார். அரசியலில் எதிரும்புதிருமாக இருப்பவர்கள் ஒரே இடத்தில் குழுமியதால், குடியரசுத் தலைவர் மாளிகையே ‘அரசியல் ரெயின்போ’-வாக மாறிவிட்டது என்கிறது அரசியல் வட்டாரம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை நம்மிடையே சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்வமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

“இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 15 அரசியல் கட்சித் தலைவர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அரசியல் எதிர்க்கருத்துக்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஜி 20 மாநாடு வெற்றிப்பெற ஒத்துழைப்பதாக ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உத்தரவாதம் அளித்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாட்டின் சுற்றுலாத்துறையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென மோடி பேசினார். கூட்டம் முடிந்தவுடன், வந்திருந்த விருந்தினர்களுக்கு சிறப்பு டீ பார்ட்டி அளிக்கப்பட்டது. அதில்தான் பல சுவாரஸ்யங்கள் அரங்கேறின.

சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச் செயலாளர் ராஜா ஆகியோருடன் கைகோத்தபடி அளவளாவினார் மோடி. சீனாவில் நடந்துவரும் உள்நாட்டுப் பிரச்னைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டனர். ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சில வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பிரதமரிடம் பகிர்ந்துகொண்டார் யெச்சூரி. ஆந்திராவில் எதிரும் புதிருமாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு இருவருமே ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். தன்னுடைய உரையில் டிஜிட்டல் அறிவுசார் விஷயங்கள் குறித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. இது மோடியை வெகுவாக ஈர்த்தது. ‘டீ பார்ட்டி’யின் போது, இருவரும் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டனர்.

தெலங்கானாவில், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என்கிற கட்சியை நடத்தி வருகிறார். அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் ஷர்மிளாவை, நவம்பர் 29-ம் தேதி கைது செய்தது தெலங்கானா காவல்துறை. இந்தச் சம்பவம் குறித்து, ஜெகன் மோகன் ரெட்டியிடம் விசாரித்திருக்கிறார் பிரதமர். ஜி 20 ஆலோசனைக் கூட்டத்திற்கு, சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் வரவில்லை. இந்தச் சூழலில், ஷர்மிளாவின் கைது தொடர்பாக மோடி விசாரித்தது, அறையிலிருந்த மற்றத் தலைவர்களின் புருவங்களை உயர்த்தியது. மோடி மீது கடும் கருத்து தாக்குதலை தொடுத்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிய பிரதமர், ‘உங்கள் ஊரில்தான் ஜி 20 மாநாடுகளையொட்டி, சிறப்புக் கூட்டங்கள் அதிகமாக நடைபெறவிருக்கின்றன. சிறப்பாக நடத்திக் கொடுக்க உதவுங்கள்’ என்று நேரடியாகவே கேட்டார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மீது பிரதமருக்கு எப்போதுமே தனிப் பிரியம் உண்டு. காங்கிரஸ் ஆட்சியில் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக வாசன் இருந்தபோது, குஜராத்திலுள்ள துறைமுகங்கள் வளர்ச்சியில், மோடியின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினார் வாசன். அப்போதிருந்தே, இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட நட்பு தொடர்கிறது. வாசனுக்கு ஸ்பெஷலாக ‘டீ’யை வரவழைத்து அளித்த பிரதமர், ‘எந்தெந்த துறைமுக நகரங்களில் ஜி 20 கூட்டங்களை நடத்தினால், வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும்?’ என விசாரித்தார். இருவருக்கும் இடையேயான உரையாடல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இருந்தது.

இந்த ‘டீ பார்ட்டி’யில் பலரது கவனத்தையும் ஈர்த்தது, மோடி – ஸ்டாலின் சந்திப்புதான். ஸ்டாலினைப் பார்த்தவுடன், ‘ஹலோ, ஹவ் ஆர் யூ?’ என பிரதமர் சிரித்தபடி நலம் விசாரிக்க, ஸ்டாலின் முகமெல்லாம் மத்தாப்பு பூத்தது. அவரைவிட, அருகில் நின்றிருந்த தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு புளங்காகிதத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம்.  ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிக்கரமாக நடத்தியதுபோல, இந்த ஜி 20 மாநாட்டையும் வெற்றிக் கரமாக நடத்திக் கொடுங்கள். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், இம்மாநாடு தொடர்பான கூட்டங்களை நடத்தலாம். எங்கே நடத்தலாமென ஆலோசனை சொல்லுங்கள்’ என பிரதமர் கோரிக்கை வைக்கவும், முந்திக் கொண்ட டி.ஆர்.பாலு, ‘உங்கள் ஆலோசனைப்படி எங்கே வேண்டுமானாலும் நடத்தலாம் சார்…’ என பதிலளித்தார்.

இவர்களின் இந்த உரையாடலை, அவர்களுக்குப் பின்னே நின்றபடி அமித் ஷா ரசிக்கவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே முறைக்கவும், காட்சி கனக்கசித்தமாக இருந்தது. சிவசேனா கட்சித் தலைவர் என்கிற அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் என்கிற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக மறைமுகமாக அங்கீகரித்து பிரதமர் அழைத்ததை பன்னீர் தரப்பு விரும்பவில்லை. ஆக, நவரசங்களையும் பிழியும் நிகழ்வாகவே, ஜி 20 மாநாடுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்தது” என்றனர் விரிவாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.