Gujarat Election Results 2022 : குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி, உத்தரப் பிரதேசம், பீகார் என சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பிறனர்களுக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
குஜராத்தை பொருத்தவரை, இத்தனை காண்டுகாலமாக பெற்றிராத வெற்றியை பாஜக பெற உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், பாஜக ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களைதான் பெற்றது. ஆனால், இம்முறை அதை தாண்டும் என தெரிகிறது.
காங்கிரஸ் சென்றமுறை 77 தொகுதிகளை பெற்ற நிலையில், இம்முறை அதைவிட குறைவாகவே பெறும் எனவும் தெரிகிறது. இந்த இரு கட்சிக்கும் மாற்று என தன்னை அறிவித்துக்கொண்ட ஆம் ஆத்மி, ஒற்றை இலக்கத்தில் தொகுதியை பெறும் என்றும், முதல் முறையாக குஜராத்தில் தனது கணக்களை நிச்சயம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இமாச்சலில் பாஜக – காங்கிரஸ் இடையே போட்டாப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற, பாஜக முயல்கிறது. இடைத்தேர்தலிலும் பாஜக சில இடங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் பாஜகவின் ஆதிக்கத்தையும், வெற்றியையும் கொண்டாடும் வகையில் டெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் கொண்டாட்ட நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (டிச. 12) புதிய குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இடைவிடாமல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, சுமார் 30க்கும் மேற்பட்ட பேரணிகளை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து, மோடி என்ற ஆளுமைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. வரும் 2023 மக்களவை தேர்தலிலும் பாஜகவின் ஆதிக்கம் தொடரும் என்பதை குஜராத் வெற்றி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
1995ஆம் ஆண்டு பாஜக குஜராத்தில் ஆட்சியை பிடித்த நிலையில், தற்போது வரை அதனை தளரவிடவில்லை. மேலும் 2001ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை, மோடி குஜராத்தின் முதலமைசச்ராக நீடித்தார். இதுவரை அந்த மாநிலத்தில் பாஜகவின் உட்சபட்ச வெற்றி என்றால் 127 தொகுதிகள்தான். அதை இம்முறை பாஜக தாண்டும் என கூறுகிறது. ஆனால், 1985ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சியின் 149 தொகுதிகள் என்ற சாதனையை முறியடிக்க இயலுமா என்பது கேள்விக்குறிதான்.
இந்தாண்டு உத்தரப் பிரேதசத்தை தக்கவைத்தது போன்று, குஜராத்தையும் மீண்டும் தக்கவைத்துவிட்டால், மோடி – ஷா கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.